கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி நிலங்களை சமன் செய்யும் நடவடிக்கையில் நேற்று (09.03.2023) என்எல்சி நிர்வாகம் காவல்துறையினர் பாதுகாப்புடன் ஈடுபட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் தலைமையில் பாமக நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
என்எல்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்ததோடு நாளை (11.03.2023) கடலூர் மாவட்டம் முழுவதும் பாமக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார். இந்த முறை இப்ப போராட்டத்திற்கு பலதரப்பட்ட மக்களும் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் நாளை(11.03.2023) கடலூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் வழக்கம்போல் திறந்திருக்கும் எனவும் வாகனங்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். என்எல்சி நிர்வாகத்திற்கு எதிராக பாமக முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.