காத்மாண்டு, நம் அண்டை நாடான நேபாளத்தில் நடந்த அதிபர் பதவிக்கான தேர்தலில், நேபாள காங்கிரஸ் வேட்பாளர் ராமச்சந்திர பவுதெல், ௭௮, பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றி பெற்றார்.
நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரியின் பதவிக் காலம், வரும் ௧௨ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து, அதிபர் பதவிக்கு தேர்தல் நடந்தது.
இந்தத் தேர்தலில், பார்லிமென்ட் உறுப்பினர்கள் ௩௩௨ பேரும், ஏழு மாகாண சட்டசபைகளின் ௫௫௦ உறுப்பினர்களும் ஓட்டளிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில், ௩௧௩ எம்.பி.,க்களும், ௫௧௮ மாகாண சட்டசபை உறுப்பினர்களும் ஓட்டளித்தனர்.
நேபாள பிரதமர் புஷ்பகமல் பிரசண்டா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் – மாவோயிஸ்ட் கட்சி, நேபாளி காங்கிரஸ் உட்பட எட்டு கட்சிகளின் சார்பில், பொது வேட்பாளராக ராமச்சந்திர பவுதெல் நிறுத்தப்பட்டார்.
சமீபத்தில் கூட்டணி அரசில் இருந்து விலகிய, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் – ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் சுபாஷ் சந்திர நெப்மாங்க், அதிபர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.
இந்தத் தேர்தலில், ராமச்சந்திர பவுதெலுக்கு ஆதரவாக ௨௧௪ எம்.பி.,க்களும், ௩௫௨ மாகாண சட்டசபை உறுப்பினர்களும் ஓட்டளித்துள்ளனர். இதையடுத்து, நேபாள அதிபராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
விவசாய குடும்பத்தில் பிறந்த பவுதெல், நேபாள காங்கிரசில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். அவர் பார்லிமென்ட் சபாநாயகர், அமைச்சர், துணை பிரதமர் உள்ளிட்ட பதவிகளையும் வகித்து உள்ளார்.
நேபாளத்தில் அரசியல் குழப்பம் நிலவும் நிலையில் இந்தத் தேர்தல் நடந்துள்ளது. நேபாளத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக உள்ள சர்மா ஒலியின் கட்சி, அரசுக்கான ஆதரவை சமீபத்தில் விலக்கிக் கொண்டது.
எதிர் கூட்டணியில் உள்ள நேபாள காங்கிரஸ் வேட்பாளரை, பிரதமர் பிரசண்டாவின் கட்சி ஆதரித்துள்ளதற்கு, ஆளுங்கூட்டணியில் கடும் எதிர்ப்பு உள்ளது.
இதனால், அதிபர் தேர்தல் முடிவு, அங்கு தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை வரும் நாட்களில் ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்