அதிக உற்பத்தி காரணமாக பல நேரங்களில் வெங்காய விலை குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். உற்பத்தி செய்த வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு சென்றால் போக்குவரத்து செலவுகூட கிடைக்காது என்ற நிலையில் சமீபத்தில் வயலிலேயே தீ வைத்து எரித்த சம்பவமும் நடைபெற்றது.

விவசாயிகள் இவ்வாறு பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கேற்ப, குஜராத்தில் வெங்காயக் கொள்முதலைத் தொடங்கியுள்ளதாக இந்திய தேசிய வேளாண் கூட்டுறவுச் சந்தைக் கூட்டமைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் பாவ் நகர் (மகுவா), கொண்டல், போர்பந்தர் ஆகிய இடங்களில் நேற்று முதல் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவுச் சந்தை சந்தைக் கூட்டமைப்பு நிறுவனம் வெங்காயம் கொள்முதலை தொடங்கியுள்ளது.

இது குறித்து இந்திய தேசிய வேளாண் கூட்டுறவுச் சந்தையின் அறிக்கையில், “மத்திய அரசின் இம்முடிவால் மாநிலத்தில் வெங்காயச் சந்தையில் விலையில் ஸ்திரத்தன்மை நிலவும். விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசின் இந்நடவடிக்கை அவர்களுக்கு உடனடி நிவாரணமாக இருக்கும். விவசாயிகள் நல்ல விலை கிடைக்கும் வகையில், ஈரமில்லா, நல்ல தரமான வெங்காயத்தைக் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்து வர வேண்டும். கொள்முதல் செய்ததற்கானப் பணம் ஆன்லைன் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும். தேவைக்கேற்ப மேலும் அதிகக் கொள்முதல் மையங்கள் திறக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் ஏற்பட்ட வெங்காயவிலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பை தடுக்கும் வண்ணம், கடந்த வாரங்களில் நாசிக் பகுதியில் உள்ள 8 மையங்களில் 355 – க்கும் அதிகமான விவசாயிகளிடம் இருந்து 1300 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக வெங்காயத்தை கொள்முதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக பல இடங்களில் கொள்முதல் நிலையங்களை திறந்துள்ளது.