என்எல்சி சுரங்க விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு விவசாயிகளும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உரிய இழப்பீடு வழங்குவதாகவும், என்எல்சி நிறுவனத்தில் நிரந்தர வேலை வழங்குவதாக கூறி என்எல்சி நிர்வாகம் பலமுறை தங்களை ஏமாற்றியதால் நிலங்களை தர மாட்டோம் என விவசாயிகளும் பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் என்எல்சி நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்தையும் காவல்துறையினரையும் வைத்து பொதுமக்களை மிரட்டி நிலங்களை கையகப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் நாளை கடலூர் மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த பாட்டாளி மக்கள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் கீழ் வளையமாதேவி பகுதியில் என்எல்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ள பணிகளை நிறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றும் தொடர்ந்து நிலம் சமனிடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வளையமாதேவி பகுதியை பார்வையிடுவதற்காக புவனகிரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழிதேவன் சென்ற நிலையில் அவரை ஊருக்குள் விடாமல் காவல்துறையினர் தடுத்தனர். தான் ஒரு மக்கள் பிரதிநிதி என்றும் மக்களின் பிரச்சனையை நேரில் சென்று பார்வையிட அனுமதிக்க வேண்டுமென காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து அதிமுக எம்எல்ஏ அருள்மொழிதேவனை கைது செய்த போலீசார் தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.