சென்னையில் உள்ள முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராம்பாலாஜி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் தனது மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், ராம்பாலாஜி கடந்த சில தினங்களுக்கு முன் மதுரையில் நடந்த நண்பரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார்.

அங்கு திருமணத்திற்கு வந்திருந்த வித்யாஸ்ரீ என்ற பெண்ணுடன் ராம்பாலாஜிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டு பேரும் தங்களது செல்போன் எண்களை பகிர்ந்துகொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளனர்.
அப்போது வித்யா ஸ்ரீ தானும் கணவரைப் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாக ராம் பாலாஜியிடம் தெரிவித்துள்ளார். பின்னர் நாம் இருவரும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம் என்று வித்யாஸ்ரீ, ராம்பாலாஜியுடன் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதற்கு ராம் பாலாஜியும் சம்மதமும் தெரிவித்துள்ளார்.
இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திய வித்யாஸ்ரீ ராம்பாலாஜியுடன் அவ்வப்போது பணம் கேட்டுள்ளார். இதையடுத்து, ராம்பாலாஜி வித்யாஸ்ரீயின் வங்கி கணக்கிற்கு ரூ.50 லட்சம் வரை பணம் அனுப்பியுள்ளார். மேலும் நேரில் சந்திக்கும்போது வித்யாஸ்ரீக்கு சில நகைகளையும் கொடுத்துள்ளார்.
அதன் பின்னர் ராம்பாலாஜி வித்யாஸ்ரீயுடன் திருமணம் குறித்து பேசும்போது அதற்கு அவர் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்த நிலையில் ராம் பாலாஜி கடந்த சில வாரங்களாக வித்யாஸ்ரீயை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால், அவருடைய செல்போன் அனைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதனால் சந்தேகமடைந்த ராம்பாலாஜி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன் படி, போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் வித்யாஸ்ரீ வீட்டை காலி செய்து தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் வித்யாஸ்ரீ மற்றும் அவரது நண்பர் அஜித்குமார் உள்ளிட்ட இருவரையும் கையும், களவுமாக பிடித்து, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதில், அவர்கள் இருவரும் ரூ.50 லட்சம் பணம் மற்றும் நகை மோசடி செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.