கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனம் 3வது அலகு நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியை தொடங்கியுள்ளது. இதற்கு கடலூர் மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் என்எல்சி நிர்வாகம் காவல்துறையினர் பாதுகாப்புடன் நிலத்தை சமனிடும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்டம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு விடுத்திருந்தது. இதனால் கடலூர் மாவட்டம் முழுவதும் சுமார் 7000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பெரிய சேவலையிலிருந்து பண்ருட்டி நோக்கி சென்ற அரசு பேருந்து செட்டியார் பாளையம் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கினர். இந்த சம்பவத்தில் பேருந்து கண்ணாடி உடைந்து சேதம் அடைந்த நிலையில் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்து கூச்சலிட்டனர்.
இதனைத் தொடர்ந்து பேருந்து பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக செட்டியார் பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.