சென்னை அடையாறு காவல் மாவட்டத்தில் வசிக்கும் 12 வயது சிறுமி கடந்த 8-ம் தேதி நீலாங்கரைக்குச் சென்றிருந்தார். அங்கு CLRI நகர் பிரதான சாலையில் சிறுமி, தனியாக நடந்துச் சென்றார். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ டிரைவர், ஆட்டோவை நிறுத்தி சிறுமியிடம் பேசினார். சிறுமியை ஆட்டோவில் ஏறும்படி டிரைவர் கட்டாயப்படுத்தினார். அதற்கு சிறுமி மறுத்து தெரிவித்திருக்கிறார். உடனே ஆட்டோ டிரைவர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி சிறுமியை ஆட்டோவுக்கு வலுகட்டாயமாக ஏற்றினார், ஆனால் சிறுமி மறுப்பு தெரிவித்ததோடு சத்தம் போட்டார். இந்தச் சமயத்தில் டிரைவர், சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்திருக்கிறார்.

சிறுமியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அதனால் ஆட்டோ டிரைவர் அங்கிருந்து தப்பி ஒடிவிட்டார். தனக்கு நடந்த பாலியல் சீண்டலை பெற்றோரிடம் சிறுமி கண்ணீர் மல்க தெரிவித்தார். அதன்பேரில் சிறுமியன் பெற்றோர் அடையாறு அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார், சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று சிசிடிவி கேமரா காட்சியை ஆய்வு செய்தனர். அப்போது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட் டோவின் பதிவு நம்பரை வைத்து டிரைவரைப் பிடித்தனர். பின்னர் டிரைவரிடம் விசாரணை நடத்தி அவர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த குற்றச் செயலுக்கு பயன்படுத்திய கத்தியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப்பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஆட்டோ டிரைவர் சிறையில் அடைக்கப்பட்டார்.