புதுடெல்லி: ரயில்வே வேலைக்கு நிலம் பெற்ற வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக இருந்தவர் லாலு பிரசாத் யாதவ். அப்போது பிஹாரைச் சேர்ந்த சிலர், ரயில்வேயில் வேலை பெற லாலு குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்களிடம் தங்கள் நிலங்களை கொடுத்ததாகவும் அல்லது குறைந்த விலைக்குவிற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
15-ம் தேதிக்கு சம்மன்: இது தொடர்பான வழக்கில் லாலு, ரப்ரி உட்பட 14 பேர் மீதுஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ்சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இவர்கள் அனைவரும் வரும் 15-ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட் டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் பாட்னாவில் உள்ள லாலுவின் மனைவி ரப்ரி தேவியின் வீட்டில் கடந்த திங்கள்கிழமை சோதனை நடத்தி அவரிடம் 4 மணி நேரம் சோதனை நடத்தினர்.
லாலுவிடம் விசாரணை: மறுநாள் டெல்லியில், மகள் மிசா பாரதி வீட்டில் தங்கியிருக்கும் லாலுவிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து உடல்நிலை குன்றியிருக்கும் லாலுவிடம் விசாரணை நடத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் டெல்லியில் உள்ள பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவின் வீட்டிலும், லாலுவின் மகள் மிசா பாரதி வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். டெல்லி, தேசிய தலைநகர் மண்டலம் மற்றும் பிஹாரில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது. இந்த இடங்கள் அனைத்தும் வேலைக்கு நிலங்கள் பெற்றுபயனடைந்தவர்களுக்கு சொந்தமானவை என கூறப்படுகிறது.
இதுகுறித்து தேஜஸ்வி கூறுகையில், ‘‘மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் எங்களை பாதிக்கவில்லை. இது அடுத்தாண்டு மக்களவை தேர்தல் வரை தொடரும்’’ என்றார்.
லாலுவின் மகள் ரோஹினி ஆச்சார்யா ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘‘உடல் நிலை பாதித்திருக்கும் தந்தையை இவர்கள் தொந்தரவு செய்கின்றனர். இதன் காரணமாக ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், டெல்லியை முற்றுகையிடுவோம். பொறுமை எல்லை கடந்து விட்டது’’ என கூறியுள்ளார்.