கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் வெற்றி அடைந்துள்ளதாக, அக்கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டம் குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து செய்தியாளர்களை சந்தித்து அன்புமணி இராமதாஸ் தெரிவித்தாவது, “வெற்றிகரமாக பாமகவின் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. மகிழ்ச்சியுடன் இதை சொல்லவில்லை. மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது எங்கள் நோக்கம் இல்லை. விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்போராட்டம் இன்று நடத்தப்பட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை காட்டிலும் 100 மடங்கு பாதிப்பு இந்த எல்எல்சியால் ஏற்படுகிறது. இது ஏதோ 10, 15 கிராம மக்களின் பிரச்சனை இல்லை, கடலூர், விழுப்புரம், கள்ளகுறிச்சி, மயிலாடுதுறை, அரியலூர் உட்பட 5 மாவட்டங்களின் பிரச்சனை.
என்எல்சியிடம் கைவசம் உள்ள 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களில், அடுத்த 30 ஆண்டுகளுக்கு நிலக்கரி வெட்டி எடுக்க முடியும். பிறகு ஏன் புதிதாக விவசாய நிலங்களை கையகப்படுத்த என்எல்சிக்கு தமிழக அரசு துணை போகிறது. 2025 க்குள் என்எல்சி நிறுவனம் தனியாருக்கு விற்கப்பட இருப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ள நிலையில், அதற்க்கு ஏன் தமிழக அரசு தினை நிற்கிறது என்று தெரியவில்லை.

எல்லாவற்றிலும் மத்திய அரசை எதிர்க்கும் திமுக, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் நிலம் கையகப்படுத்தலில் மட்டும் மத்திய அரசை ஆதரிப்பது ஏன்? 2040-ல் தமிழகத்தை கார்பன் உமிழ்வு இல்லாத மாநிலமாக்குவோம் என்று கூறும் முதல்வர், நெய்வேலியில் பழுப்பு நிலக்கரியை எரித்து காற்று, மண், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தி மின்சாரத்தை தயாரிக்க காரணமாக இருக்கின்றார். ஏன் இந்த முரண்பாடான கொள்கை.
இன்று நடப்பது அடையாள, அறவழிப்போராட்டம் மட்டுமே, இனி நடக்கும் எங்கள் போராட்டம் இவ்வாறு இருக்காது. திமுகவினர் அச்சுறுத்தி சில இடங்களில் கடைகளை திறக்க வைத்துள்ளனர்.

சல்லிக்கட்டுக்கு பிரச்சனைக்கு லட்சக்கணக்கில் போராடினார்கள. சல்லிக்கட்டால் கல்வி, வேலை, குடிநீர், உணவு கிடைக்காது. ஆனால் என்எல்சி நிறுவனத்தால் சுற்றுச்சூழல், வாழ்வாதாரம் பிரச்சனை. விவசாய சங்கங்கள் களத்திற்கு வர வேண்டும்.
வேளாண்மையை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்வோம், இராணுவமே வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை, என்எல்சியின் நிலம் கையகப்படுத்தல் தொடர்ந்தால் அப்பகுதியில் சிங்கூர், நந்திகிராம் போன்ற சூழல் உருவாகிவிடும்.
முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் , எம்ஆர்கே பன்னீர் செல்வம் என்எல்சியின் ஏஜெண்டாக செயல்படுகிறார். அரசியலுக்கு அப்பாற்பட்டு தொடர்ந்து போராடுவோம். அனைத்து கட்சித் தலைவர்களையும், விவசாய சங்கங்களையும் சந்தித்து ஆதரவு கேட்போம்” என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.