கோவை: விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரத்தை 1000 யூனிட்டாகவும், கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரத்தை 300 யூனிட்டாக உயர்த்தி உத்தரவு வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கு கோவையில் இன்று விசைத்தறியாளர்கள் பாராட்டுவிழா நடத்துகிறார்கள். இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார். முன்னதாக அதிமுக மற்றும் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 6 ஆயிரம் பேர், முதல்வர் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தனர்.
1,62,788 விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்ட 750 யூனிட் இலவச மின்சாரம் 1000 யூனிட்டாக 1.3.2023 முதல் உயர்த்தி உத்தரவு, விசைத்தறி நெசவாளர்கள் 1000 யூனிட் மின்சாரத்திற்கு மேல் பயன்படுத்தும் கூடுதல் யூனிட்டுக்கு உயர்த்தப்பட்ட கட்டணம் 70 பைசாவாக குறைப்பு, 74,559 கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், 300 யூனிட்டாக 1.3.2023 முதல் உயர்த்தி உத்தரவு என 2,37,347 நெசவாளர்களின் வாழ்வில் விளக்கேற்றிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்கள் சங்கங்கள் சார்பில் நன்றி அறிவிப்பு பாராட்டு விழா, கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் இன்று (சனி) மாலை 4 மணிக்கு நடக்கிறது.
இதில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து இன்று காலை 11.30 மணி அளவில் விமானம் மூலம் கோவை வந்தார். அவருக்கு, பீளமேடு விமான நிலையத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து காரில் சின்னியம்பாளையத்தில் உள்ள பிருந்தாவன் மஹாலுக்கு சென்றார். அங்கு அதிமுக உள்பட மாற்றுக்கட்சியினர் 6 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் விழா நடந்தது. கட்சியில் இணைந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து பாராட்டினார்.
நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கார் மூலம் சின்னியம்பாளையத்தில் உள்ள லீ மெரீடியன் ஓட்டலுக்கு சென்றார். அங்கு மதியம் உணவு அருந்தி, சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். தொடர்ந்து, மாலை 4 மணிக்கு கோவை அடுத்த கருமத்தம்பட்டி நால்ரோட்டில் கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கம் சார்பில் விசைத்தறியாளர்களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரத்தை 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்கியதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நடைபெறும் பிரமாண்டமான பாராட்டு விழாவில் கலந்துகொள்கிறார். விழா முடிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காரில் கோவை விமான நிலையம் சென்று இரவு 9 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள், முன்னணி நிர்வாகிகள் செய்துள்ளனர்.
2700 போலீசார் பாதுகாப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை வருகையை முன்னிட்டு மேற்கு மண்டல ஐஜி சுதாகர், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உத்தரவின்பேரில், மாற்றுக்கட்சியினர் இணையும் விழா நடைபெறும் பகுதி மற்றும் கருமத்தம்பட்டியில் நடைபெறும் பாராட்டு விழா உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. முதல்வர் பயணம் செய்யும் வழியில் மற்றும் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெறும் மேடைவரை 2700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 7 மாவட்ட எஸ்பிக்கள், இரண்டு டிஐஜி, 7 ஏ.டி.எஸ்.பி, 27 டிஎஸ்பி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்டம் முழுவதும் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.