நாகூர் பட்டினச்சேரி சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாயில் இரண்டுமுறை சரி செய்யப்பட்ட பிறகும் மீண்டும் கசிந்து வானுயரத்தில் கச்சா எண்ணெய் பீய்ச்சி அடிப்பதால், நாகூர் மக்களின் அச்சம் அதிகரித்துள்ளது; வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் சிபிசிஎல் நிறுவனத்தின் சார்பாக பதிக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் குழாயில் கடந்த 2 ஆம் தேதி இரவு உடைப்பு ஏற்பட்டது. குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கடலில் கலந்த காரணத்தால் அப்பகுதி மீனவர்கள் கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆளாகி 5 நாட்கள் கடலுக்கு செல்லாமல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து 3, 4 , 5 ஆகிய தேதிகளில் மூன்றுமுறை குழாய் உடைப்பை சரி செய்ததாக சிபிசிஎல் நிர்வாகம் அறிவித்தனர்.
அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் எண்ணெய் உள்ளிட்ட எந்தவித எரிவாயுக்களையும் குழாயில் கொண்டு செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதால் நாகூர் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கடலுக்கு தொழிலுக்கு சென்றனர். இதனிடையே குழாயில் கச்சா எண்ணெய் செலுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்த நிலையில், இன்று பம்பிங் செய்ததால் வானுயரத்தில் கச்சா எண்ணெய் பீய்ச்சி அடித்தது.
கசிந்த எண்ணைய் கடலில் கலந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் கடற்கரையில் மீண்டும் திரண்டனர். சரி செய்யப்பட்ட அதே இடத்தில் மீண்டும் கசிவு ஏற்பட்டது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கச்சா எண்ணெய் துர்நாற்றம் வீசியதால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகை வட்டாட்சியர் ராஜசேகர் ஆய்வு மேற்கொண்டு மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட நிர்வாகம் உத்தரவை மீறி சிபிசிஎல் நிர்வாகம் செயல்படுவதாக புகார் தெரிவித்தனர்.
நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் சிபிசிஎல் நிறுவனத்தின் சார்பாக பதிக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ள காரணத்தால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குழாயை சுத்தம் செய்யும்பொழுது தண்ணீர் மட்டுமே வெளியானது என்றும், கச்சா எண்ணெய் குழாயில் செலுத்தவில்லை என்றும் சிபிசிஎல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.