புதுடெல்லி: தமிழகத்தில் வட மாநிலத்தவர் தாக்கப்படுவதாக கிளம்பிய சர்ச்சைக்கு இரு மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் பின்னணியில் ஒரு கும்பல் செயல்பட்டது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பிஹாரை சேர்ந்த மணிஷ் காஷ்யப் என்பவர் தன்னை ஒரு சமூக செயற்பாட்டாளர் என கூறிக் கொண்டு தனது யூடியூப் சேனலில் போலி செய்திகளை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். இதன்மூலம் அவருக்கு மாதம் ரூ.5 லட்சம் வரை வருமானம் கிடைத்துள்ளது. வருமானத்தை மேலும் கூட்டுவதற்காக போலியான காட்சிகளை படம் பிடிக்க முடிவு செய்துள்ளார்.
இதற்காக பாட்னாவின் ஜக்கன்பூர் பகுதியில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. அதில் படுகாயம் அடைந்தது போல் வேடமிட்ட இருவர் தமிழகத்தில் தாங்கள் தாக்கப்பட்டது போல் பேசி நடிக்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சித்தரிக்கப்பட்ட காட்சிகள் மார்ச் 8-ல் ஹோலி அன்று சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மணிஷ் காஷ்யப் உள்ளிட்ட மூவர் மீது பிஹார் போலீஸார் நேற்று வழக்குபதிவு செய்தனர். இதில் ராகேஷ் திவாரி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதவிர 30 போலி காட்சிப் பதிவுகளை பதிவேற்றம் செய்ததாக மற்றொரு வழக்கு மணிஷ் காஷ்யப் உள்ளிட்ட 4 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அமன் குமார், ரஞ்சன் குமார் ஆகியோர் கைதாகி உள்ளனர். இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் பிஹார் பொருளாதார குற்றப் பிரிவு எஸ்.பி. சுஷில் குமார் கூறும்போது, “இரு வழக்குகளிலும் முக்கிய குற்றவாளி மணிஷ் காஷ்யப் உள்ளிட்ட 3 பேர் தேடப்பட்டு வருகின்றனர். மணிஷ் மீது மேலும் 7 வழக்குகள் உள்ளன. இவை 2 வருடங்களுக்கு முன் பதிவு செய்யப்பட்டவை. மணிஷ் காஷ்யப் மற்றும் ராகேஷ் திவாரி மீது தமிழகத்தின் கிருஷ்ணகிரியிலும் ஒரு வழக்கு உள்ளது” என்றார்.
கிருஷ்ணகிரி வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க, ஆய்வாளர் சவீதா தலைமையில் தனிப்படை பாட்னாவில் முகாமிட்டுள்ளது. இவர்கள் பிஹாரில் கைதான ராகேஷ் திவாரியை டிரான்ஸிட் ரிமாண்டில் கிருஷ்ணகிரி அழைத்துச் சென்று விசாரிக்க உள்ளனர். இதுபோன்ற வழக்குகளுக்காக இரு மாநிலங்கள் தரப்பில் தலா 5 பேர் கொண்ட பொறுப்பு அதிகாரிகள் குழு அமர்த்தப்பட்டுள்ளது. இக்குழுவுக்கு பிஹாரில் ஏஜிடி ஜிதேந்தர் சிங்கும் தமிழகத்தில் ஐஜி அவினேஷ்குமாரும் தலைமை ஏற்றுள்ளனர். தமிழக குழு கடந்த வாரம் பாட்னாவுக்கு நேரில் வந்தும் ஆலோசனை நடத்திச் சென்றது.