பெங்களூரு – மைசூரு எக்ஸ்பிரஸ்வே; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

தென்னிந்தியாவில் ஏப்ரல் – மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள ஒரே மாநிலம் கர்நாடகா. இங்கு முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த சூழலில் பல்வேறு நலத்திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.

பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

அதில் பிரதமர் மோடி இன்று (மார்ச் 12) தொடங்கி வைக்கவுள்ள பெங்களூரு – மைசூரு எக்ஸ்பிரஸ்வே சாலை திட்டம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இது பாரம்பரிய நகரையும், ஐடி மற்றும் ஸ்டார்ட்-அப் ஹப்பின் தலைநகரையும் இணைக்கும் சாலை. 8,478 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.

திருவிழா கோலமான மாண்டியா

இதற்காக மாண்டியா நகருக்கு பிரதமர் மோடி வருகை புரிந்து ரோடு ஷோவில் (Road Show) ஈடுபட்டார். பெங்களூரு – மைசூரு அதிவிரைவு சாலை திட்டம் மார்ச் 2018ல் அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த அக்டோபர் 2022ல் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா நெருக்கடியால் நில கையகப்படுத்தும் பணிகள் தாமதமாகின. அதன்பிறகு பலமுறை காலம் தாழ்த்தப்பட்டு வந்தது.

பெங்களூரு – மைசூரு எக்ஸ்பிரஸ்வே சிறப்புகள்

118 கிலோமீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை 275-ல் (NH-275) 10 வழிச் சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயண நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 75-90 நிமிடங்களாக குறைக்கப்படும்.இந்த எக்ஸ்பிரஸ்வே பெங்களூரு – நிதகட்டா (58 கிலோமீட்டர்), நிதகட்டா – மைசூரு (61 கிலோமீட்டர்) என இரண்டு கட்டங்களாக திலிப் பில்ட்கன் லிமிடெட் (DBL) நிறுவனத்தால் அமைக்கப்பட்டது.பெங்களூரு – மைசூரு எக்ஸ்பிரஸ்வே திட்டத்தில் 9 பெரிய பாலங்கள், 42 சிறிய பாலங்கள், 64 சுரங்க வழிச் சாலைகள், 11 மேல் வழிச் சாலைகள், 4 ரயில் மேம்பால சாலைகள் அமைந்துள்ளன.பிடாடி, ராமநகரா – சன்னப்பட்னா, மட்டூர், மாண்டியா, ஸ்ரீரங்கபட்னா ஆகிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பெங்களூரு – மைசூரு நெடுஞ்சாலையை ஒட்டி 5 இடங்களில் பைபாஸ் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.பெங்களூருவை சேர்ந்த பொதுமக்கள் வார இறுதி நாட்களில் ஊட்டி, வயநாடு, கோழிக்கோடு, கூர்க், கண்ணூர் ஆகிய இடங்களுக்கு விரைவாக செல்ல இந்த எக்ஸ்பிரஸ்வே பெரிதும் உதவிகரமாக இருக்கும்.கர்நாடகாவிற்கு மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் சுற்றுலா துறைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் எக்ஸ்பிரஸ்வே காணப்படுகிறது.பெங்களூரு – நிதகட்டா வரையிலான எக்ஸ்பிரஸ்வே சாலையை கடக்க 135 முதல் 880 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும். பெங்களூருவில் இருந்து மைசூரு வரை செல்ல ஒட்டுமொத்தமாக 250 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி வரும்.இந்த எக்ஸ்பிரஸ்வே சாலையை இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், மெதுவாக நகரக்கூடிய வாகனங்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பெங்களூரு – எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஸ்வே சாலைக்கு காவேரி, கிருஷ்ணராஜ வாடியார் IV, பத்ம பூஷண் விருது பெற்ற பாலகங்காதரனாத சுவாமி உள்ளிட்ட பெயர்களை சூட்ட வேண்டும் என்று அரசியல் கட்சிகளிடம் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை.இந்த சாலையின் வருகையால் மைசூரு ரோட்டில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி பெரிதும் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.