புதுடெல்லி: பிரபல தொழில் அதிபர் கவுதம் அதானியின் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்காவில் உள்ள பிரபல சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ஓர் அறிக்கை வெளியிட்டது.
அதன்பின், அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் கோடிக்கும் மேலாக சரிந்தது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவும், கூட்டுக்குழு விசாரணை நடத்தவும் எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.
இதுதொடர்பாக மக்களவையில் நேற்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நிதித் துறை இணை அமைச்சர் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளை பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) விசாரித்து வருகிறது. செபியில் பட்டியலிடப்பட்ட அதானியின் 9 நிறுவன பங்குகள் ஜனவரி 24 முதல் மார்ச் 1 வரை 60 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
இந்த நிறுவனங்களின் பங்கு களில் அமைப்பு அளவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவையும் மத்திய அரசு அமைக்கவில்லை.
இதுதொடர்பாக செபி விசாரணை நடத்தி 2 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) தனது அறிக்கையை ஏற்கெனவே தாக்கல் செய்துள்ளது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.