நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்சா ஏ வகை வைரஸான எச்3என்2 தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் முதியோர், இணை நோயாளிகள் போன்ற ஆபத்து அதிகமுள்ளவர்களை தனிமைப்படுத்த வேண்டும், காய்ச்சல் தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று கோவிட் பணிக்குழுவின் தலைவர் ரந்தீப் குளேரியா வலியுறுத்தினார்.
இந்தியா முழுவதும் இன்ஃப்ளூயன்சா ஏ வகை வைரஸான எச்3என்2 தொற்று வேகமாகப் பரவி
வருகிறது. இந்நிலையில், பத்மஸ்ரீ விருது பெற்ற மருத்துவரும், கோவிட் பணிக்குழுவின் தலைவருமான ரந்தீப் குளேரியா நேற்று மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற மருத்துவ அறிவியல் கழக மாநாட்டில் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு இடையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
இன்ஃப்ளூயன்சா அலை ஒவ்வொரு ஆண்டும் நிகழக்கூடியது. ஆனால் இந்த ஆண்டு பல்வேறு காரணங்களால் தொற்று அதிகமாக உள்ளது. கடந்த 2009-ல் இன்ஃப்ளூயன்சா ஏ வகையின் துணை வகையான எச்1என்1 (பன்றிக் காய்ச்சல்) வைரஸ் ஆதிக்கம் செலுத்தியது. இப்போது மற்றொரு துணை வகையான எச்3என்2 வைரஸ் ஆதிக்கம் செலுத்துவதை காண்கிறோம்.
இந்த வைரஸ் இதற்கு முன்பும் காணப்பட்டது. ஆனால் இம்முறை வேறுபட்ட மரபணுவை கொண்டுள்ளது. இதனால் இது மிக வேகமாகப் பரவுகிறது. கரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட தடுப்பு நடைமுறைகள் அனைத்து சுவாச நோய்களுக்கும் பொருந்தும். எனவே அவற்றை இப்போதும் பின்பற்ற வேண்டும். முகக்கசவம் மீண்டும் கட்டாயமாக்கப்பட வேண்டுமா என கேட்கிறீர்கள். முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம். ஏனெனில் சளித்துளி மற்றும் இருமல் மூலம் இது பரவுகிறது.
சில சமயங்களில் பள்ளிகளில் குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டு அது வீட்டில் உள்ளவர்களுக்கும்
பரப்பப்படுகிறது. இதில் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே நாம் முகக்கசவம் அணிவதுடன் தொடர்ச்சியாக கைகளை சுத்தம் செய்யவேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும்.
ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி இரண்டாவதாக, முதியவர்கள், இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற ஆபத்து அதிகமுள்ளவர்களை தனிமைப்படுத்த வேண்டும். மேலும் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.
தடுப்பூசிகள் உடல்நலக்குறைவு ஏற்படுத்தாமல் ஒரே மாதிரியான நோய் எதிர்ப்பு சக்தியைக்
கொடுக்கும். இன்ஃப்ளூயன்சா தடுப்பூசி ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய தடுப்பூசியாக வருகிறது. இன்ஃப்ளூயன்ஸா ஏ, பி மற்றும் அவற்றின் துணை வகைகளை உள்ளடக்கிய தடுப்பூசிகளும் உள்ளன. இவ்வாறு ரந்தீப் குளேரியா கூறினார்.