கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்: மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடை பிடிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது. கடந்த சிலமாதங்களாக ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த தினசரி தொற்றுபாதிப்பு தற்போது 40 ஆக அதிகரித்துள்ளது.

4 மாதங்களுக்கு பின்னர் தொற்றின் தீவிரத்தால் திருச்சியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கரோனா தொற்று பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்தியஅரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கரோனா பாதிப்பு 2020-ம் ஆண்டு தொடங்கி 36,000 என்ற அளவில் உச்சத்தை தொட்டது. சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டதால் அந்த எண்ணிக்கை ஒன்று அல்லது இரண்டு அளவுக்கு குறைந்து வந்தது. தற்போது மீண்டும் தொற்றின் பாதிப்புஅதிகரித்துள்ளது.

மத்திய அரசின் சுகாதாரத்துறை நெறிமுறைகளின்படி, அனைவரும் தேவைக்கேற்ப முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, கைகளை சோப்பு கொண்டு அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், இன்புளுயன்சா காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் தமிழகம் முழுவதும் 1558 இடங்களில் நடத்தப்பட்டது. அதில், 2,663 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல் முகாம்கள் நடமாடும் மருத்துவமனைகளை கொண்டு தொடர்ந்து நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.