புதுச்சேரி: ரூ.11 ஆயிரத்து 600 கோடிக்கான வரியில்லா பட்ஜெட்டை, முதல்வர் ரங்கசாமி நேற்று தாக்கல் செய்தார். காஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.
புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் கடந்த 9ம் தேதி துவங்கியது. இதை தொடர்ந்து, சட்டசபையில், 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு:
ரூ.50 ஆயிரம்
* அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும், சமையல் காஸ் சிலிண்டருக்கு மாதம் ரூ.300 வீதம், ஆண்டுக்கு 12 சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும்.
* புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு, ‘முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்’ கீழ், குழந்தை பிறந்தவுடன் ரூ.50 ஆயிரம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 18 ஆண்டு காலத்திற்கு நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தப்படும்.
* படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக, ரூ.100 கோடிக்கு மேலான முதலீட்டில் தொழில் துவங்கும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு, நிலம், கட்டடங்கள் மற்றும் இயந்திரங்களின் மதிப்பீட்டிற்கு, தொழில் துவங்கப்பட்ட தேதியில் இருந்து ஆண்டிற்கு ஒரு சதவீதம் மானியம் வீதம் மொத்தம் 5 ஆண்டிற்கு 5 சதவீத மானியம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
* மத்திய அரசின் ‘பிரதம மந்திரி சுரக் ஷா பீமா யோஜனா’ என்ற விபத்து காப்பீட்டுத் திட்டம் ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த சமூக பாதுகாப்பு திட்டத்தில் அனைத்து சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நபர் ஒருவருக்கு ஆண்டுக்கு செலுத்த வேண்டிய பிரிமியம் தொகையை அரசே செலுத்தும்.
* புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தால் (பி.ஆர்.டி.சி) இயக்கப்படும் உள்ளூர் பஸ்களில் அட்டவணை இன பெண்கள் இலவசமாக பயணம் செய்ய வழிவகை செய்யப்படும்.
* உலகின் பல்வேறு நாடுகளில் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் தமிழ் அறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், மேம்படுத்தவும் புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

நாட்டில் முதன்முறையாக
பட்ஜெட் தாக்கல் செய்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, இந்தாண்டு பட்ஜெட்டில் மகளிருக்கான சிறப்பு நிதியத்திற்கும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள பசுமை சிறப்பு நிதியத்திற்கும், இளையோருக்கான சிறப்பு நிதியத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு நிதியங்களுக்கு 2023-24ம் நிதியாண்டில் ரூ.2,391 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மகளிருக்கான தனி நிதியம் மூலமாக, மகளிருக்கு அதிகாரம் மற்றும் சமவாய்ப்பு அளித்து ஊக்கப்படுத்தவும், மகளிருக்கு முடிவு எடுக்கும் உரிமை வழங்கவும், அவர்கள் பயன்பெறும் வகையில் மகளிருக்கான நிதி செலவினங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். மகளிருக்கான நிதியத்துக்கு ரூ.1,332 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியை சேர்ந்த 15 வயது முதல் 29 வயது வரையிலான இளையோர்களின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் பல்வேறு துறைகளில் இளையோர் சார்ந்த திட்டங்களை அரசு செயல்படுத்த உள்ளது. இதற்காக ரூ.504 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதன்முறையாக பசுமை நிதியம் திட்டத்தை புதுச்சேரி அரசு செயல்படுத்த உள்ளது. அரசின் நிதி, நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பதற்கும் பயன்படுத்துவதை உறுதி செய்வதே பசுமை நிதி அறிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் காலநிலை மாற்றம் குறித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற தேவையான பசுமை சார்ந்த திட்டங்களை மதிப்பிடுவதற்காக பசுமை நிதி அறிக்கையை தயார் செய்யும் முயற்சியை, ஆற்றல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியுடன் அரசு துவக்கி உள்ளது. பசுமை பட்ஜெட்டுக்காக அனைத்து துறைகளுக்கும் ஒட்டுமொத்தமாக ரூ.555 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,
இவ்வாறு முதல்வர் ரங்கசாமி பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்