சாகித்ய அகாதெமி விருதாளர் மு.இராஜேந்திரனுக்கு தில்லி தமிழ் சங்கம் பாராட்டு

புதுடெல்லி: தில்லித் தமிழ்ச் சங்கத்தில், சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளரும் ஐஏஎஸ் அதிகாரியுமான டாக்டர் மு.இராஜேந்திரனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவர் எழுதிய, ‘காலா பாணி’ எனும் வரலாற்று நூலுக்காக சாகித்ய அகாதெமி அவருக்கு விருதளித்திருந்தது.

இந்தப் பாராட்டு விழா, தில்லித் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர் இராகவன் தலைமையில் நடைபெற்றது. பலரும் பாராட்டுரை வழங்கி, விருதாளர் இராஜேந்திரனை கவுரவித்தனர்.

தில்லித் தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளர் இரா.முகுந்தன் தன் வரவேற்புரையில், “மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்கள் மற்றும் கலைஞர்களை பாராட்டி கவுரவிப்பதை தில்லித் தமிழ்ச் சங்கம் பாரம்பரியமாக செய்து வருகிறது. நல்ல தரமான இலக்கியத் தரம் வாய்ந்த நூல்களை யாரேனும் எழுதினால், அதை தில்லித் தமிழ்ச் சங்கம் பதிப்பித்து வெளியிட உதவும்” என்றார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் அறவேந்தன் பேசுகையில், “ஓர் ஆட்சிப்பணி அதிகாரி பல கடமைகளுக்கிடையே வரலாற்று நூல் எழுதுவதென்பது பாராட்டுக்குரியது. வரலாறு என்பது மிகவும் கவனத்துடன் கையாளப்பட வேண்டியது. அதை நூலாக ஒவ்வொரு பக்கத்திலும், கதையினூடே வரலாற்றையும் இணைத்து கோர்வையாக எழுதியுள்ளது மிகவும் அருமை” எனக் கூறினார்.

பத்திரிகையாளரான கவிஞர் மு.முருகேஷ் தனது வாழ்த்துரையில், “இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தது தென்தமிழகம். தென்தமிழகத்தின் ஆட்சியாளர்களாக இருந்த பாளையக்காரர்களுக்கும், பிரிட்டீஷ் அரசாங்கத்தின் ஏஜெண்டுகளாக இருந்த நவாபுகளுக்குமிடையே வரிவசூல் தொடர்பாய் அவ்வப்போது பிரச்சினைகள் இருந்தன.

நவாபுகளின் தந்திரத்தைப் புரிந்துகொண்ட பிரிட்டீஷ் அரசாங்கம், நேரடியாகப் பாளையக்காரர்களுடன் மோதலைத் தொடங்கியது. புலித்தேவன், கட்டபொம்மன், ஊமைத்துரை, மருதுபாண்டியர் உள்ளிட்ட பாளையக்காரர்களுடன் பிரிட்டீஷ்க்காரர்கள் போர் நடத்தினார்கள் .

தங்களுடன் மோதுபவர்களுக்கு மிகுந்த அச்சத்தை உருவாக்க, போராளிகளைத் தூக்கிலிட்டார்கள். 1802-ஆம் ஆண்டு போராளிகளை முதன்முறையாக நாடு கடத்தினார்கள். நாடு கடத்துவதை ‘காலா பாணி’ (கறுப்புத் தண்ணீர்) என்று அழைத்தார்கள் பிரிட்டீஷார்.

அப்படி, தென்தமிழகத்தில் இருந்து சிவகங்கை அரசர் வேங்கை பெரிய உடையணத் தேவரும், போராளிகள் 71 பேரும் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்டார்கள். 73 நாள்கள் நீடித்த கடுமையான கடல் பயணத்திற்குப் பிறகு, அரசியல் கைதிகள் பினாங்கில் சிறை வைக்கப்பட்டனர்.

பெரிய உடையணத் தேவரை மட்டும் பினாங்கில் இருந்து சுமத்திரா தீவிற்கு மாற்றினார்கள். அங்கு மால்பரோ கோட்டையில் சிறை வைக்கப்பட்ட அரசர், நான்கு மாதங்களில் இறந்து போகிறார்.

தூத்துக்குடியில் இருந்து போராளிகளை கப்பலில் அழைத்துச் செல்வதில் தொடங்கி, மால்பரோ கோட்டையின் சிறையில் சிவகங்கை அரசர் உயிர்விடுவது வரையிலான சம்பவங்களைத் துயரக் காவியமாக எழுதியுள்ளார் இராஜேந்திரன்” எனக் குறிப்பிட்டார்.

கவிஞர் மற்றும் எழுத்தாளர் அ.வெண்ணிலா கூறுகையில், “எழுத்தாளர், டாக்டர் மு.இராஜேந்திரன் தனது ஆட்சிப்பணியில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை “செயலே சிறந்த சொல்” என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். 10 முதல் 15 ஆண்டுகளாக இலக்கியப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

கவிதைகளை எழுத ஆரம்பித்த இவர் 6 முதல் 7 நாவல்களை எழுதியுள்ளார். பிறகு செப்பேடுகளைப் பற்றி எளிய முறையில் எழுதியதுடன், தொடர்ச்சியாக தனது சுய குடும்பம் பற்றி வரலாற்று நாவலாக எழுதினார்.

காலணிய ஆதிக்கம் பற்றி 1801 எனும் நாவலில் யாரும் அறியா தகவல்களை, நமக்கு தந்துள்ளார். “காலா பாணி” நாவலுக்கென சுமத்ரா, பினாங்கு தீவுச் சிறைச்சாலை சென்று உண்மையான தரவுகளைச் சேகரித்து நூல் எழுதியிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது” என்றார்.

விருது பெற்ற எழுத்தாளர், டாக்டர் மு.இராஜேந்திரன், தனது ஏற்புரையில், “நான் காலா பாணி நூலுக்கென இரண்டு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தேன். பல விதமான அனுபவங்கள் ஏற்பட்டன. சிறைச்சாலையில் பல மனிதர்களை சந்தித்து விஷயங்களை அறிய முடிந்தது. வரலாறு மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. தமிழ்ச் சமூகம் எவ்வாறெல்லாம் இம்மண்ணில் வாழ்ந்துள்ளது என்பதை நாம் அறிந்து, நமது பாரம்பரியம் பெற்ற தமிழ் மண்ணை காக்க வேண்டும். அதற்கு இந்த வரலாற்று நூலை எழுதினேன்” என்றார்.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வீ.ரெங்கநாதன் நன்றியுரை ஆற்றினார். தில்லித் தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர்களான பெரியசாமி, சுந்தரேசன் மற்றும் தில்லி வாழ் தமிழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.