புதுடெல்லி: தன்பாலின திருமணம் தொடர்பான வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
2018-ம் ஆண்டில் தன்பாலின உறவு குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது. எனினும், தன்பாலின திருமணம் என்பது இந்தியாவில் தற்போது வரை சட்டமாகவில்லை. இந்நிலையில், சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் தங்களது திருமணத்தை அனுமதிக்க உத்தரவிட கோரி தன்பாலின ஜோடி ஒன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் மட்டுமல்லாமல் பிற உயர் நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள தன் பாலின ஈர்ப்பு திருமண வழக்குகளை விசாரிக்கவும் முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை பிரமாணப் பத்திரமாக நேற்று முன்தினம் தாக்கல் செய்துள்ளது.
அந்த பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு கூறியுள்ளதாவது. தன்பாலின திருமணம் என்பது இந்திய குடும்ப அமைப்பு என்ற கருத்துடன் ஒத்துப் போகாது. இந்திய குடும்ப அமைப்பு என்பது கணவன், மனைவி மற்றும் குழந்தைகளை உள்ளடக்கியது.
இந்திய குடும்ப அமைப்பில் ஆண், பெண் என உயிரியல் வேறுபாடுகள் கொண்ட இருவர் திருமண ஒப்பந்தம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வதே சிவில் சமூகம். தன் பாலின ஈர்ப்பாளர்களை குடும்ப அமைப்புடன் ஒப்பிடக்கூடாது. அரசியல் அமைப்புச் சட்டம் 19-ன் படி குடி மக்கள் சேர்ந்து வாழத் தடையில்லை. அதே நேரத்தில் சட்பூர்வ அங்கீகாரம் வழங்குவது பற்றி மத்திய அரசுதான் தெரிவிக்கும். குடும்ப வன்முறை பாதுகாப்பு சட்டத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்களை சேர்க்க இயலாது. தன் பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்க கூடாது. இவ்வாறு மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது. ஏப்ரலில் விசாரணை. இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் மாற்ற பரிந்துரை செய்துள்ளது. மேலும் இந்த வழக்குகள் மீதான விசாரணை ஏப்ரல் 18-ம் தேதி முதல் தொடங்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.