சென்னை: தமிழகத்தில் மின்பயன்பாடு அதிகரிப்பு காரணமாக, தினசரி மின்தேவை 17,647 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் மின்நுகர்வோர் 2.67 கோடி பேர் உள்ளனர். தினசரி மின்தேவை சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இதில், விவசாயத்துக்கு 2,500 மெகாவாட் என்ற அளவில் உள்ளது.
இந்த ஆண்டுக்கான கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால், வீடுகளில் ஏசி, மின்விசிறி, ஏர்கூலர் உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக, தினசரி மின்தேவை 16 ஆயிரம் மெகாவாட்டுக்கு மேல் உள்ளது.
மேலும், விவசாய பிரிவில் கூடுதலாக வழங்கப்பட்ட 1.50 லட்சம் மின்இணைப்புகளால், அந்தப் பிரிவில் மட்டும் கூடுதலாக 727 மெகாவாட் அதிகரித்துள்ளது.
இதனால், முன் எப்போதும் இல்லாத அளவாக நேற்று முன்தினம் தினசரி மின்தேவை 17,647 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. கடந்த 2022 ஏப்.29-ம் தேதி 17,563 மெகாவாட் என்பதே சாதனை அளவாக இருந்தது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது. மத்திய தொகுப்பில் இருந்து 5,800 மெகாவாட், சூரியசக்தி, அனல் மின்நிலையங்களில் இருந்து தலா 3,800 மெகாவாட் மின்சாரம் மூலமாக இந்த மின்தேவை பூர்த்தி செய்யப்பட்டது.
கோடை காலத்தின் தொடக்கத்திலேயே தினசரி மின்தேவை 17 ஆயிரம் மெகாவாட்டை தாண்டிய நிலையில், வரும் நாட்களில் தினசரி மின்தேவை 18 ஆயிரம் முதல் 19 ஆயிரம் மெகாவாட் என்ற அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, வரும் நாட்களில் மின்வாரியம் தனது அனல்மின் நிலையங்களில் முழு அளவில் உற்பத்தியை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், சூரியசக்தி, காற்றாலைகள் மற்றும் மத்திய மின்தொகுப்பு ஆகியவற்றில் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும். இவை தவிர, தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.