சென்னை: தமிழகத்தில் வணிக வரி, பத்திரப் பதிவு மற்றும் மத்திய அரசின் ஜிஎஸ்டி நிலுவை ஆகியவை சேர்த்து, இந்தாண்டு ரூ.1.50 லட்சம் கோடியாக வருவாய் உயரும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
சென்னை நந்தனத்தில் உள்ள வணிகவரி அலுவலகத்தில், வணிகவரி இணை ஆணையர்கள் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
கடந்தாண்டை காட்டிலும் வணிகவரித் துறையில் இந்தாண்டு ரூ.24,528 கோடியும், பதிவுத் துறையில் ரூ.3,588 கோடியும் என, ரூ.28,116 கோடி கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளது. வணிக வரி, பதிவுத் துறை வருவாய் மற்றும் மத்திய அரசு வழங்கும் இழப்பீட்டுத் தொகையும் சேர்த்து இந்த ஆண்டு ரூ.1.50 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு மத்திய அரசு இதுவரை ஜிஎஸ்டி நிலுவைத் தொகை தரவேண்டியுள்ளது.
போலி ஆவணங்கள் பதிவு குறித்த மனுக்கள் அதிகளவில் வருவதால் இது தொடர்பாக ஆய்வு செய்து முடிவெடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. பதிவுத் துறையில் தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யும் நோக்கில், இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் புதிதாக 2 சர்வர்களை கூடுதலாக சேர்க்க உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.