திருப்போரூர்: வண்டலூர் அருகே மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தடகளப் போட்டி நேற்று தொடங்கியது. தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழம் சார்பில், அகில இந்திய அளவிலான பல்கலை கழக அணிகள் பங்கேற்கும் தடகள போட்டி நடக்க உள்ளது. நேற்று துவங்கிய போட்டி, வரும் 16ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில், இந்தியா முழுவதும் இருந்து 176 பல்கலைக்கழகங்களை சேர்ந்த 1800 மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு 26 பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகின்றன.
இதன் தொடக்க விழாவில் நேற்று பல்கலைக்கழக வேந்தர் எம்.சுந்தர் தலைமை தாங்கினார். பதிவாளர் சத்தியகுமார் வரவேற்றார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், பள்ளிக்கரணை காவல் இணை ஆணையர் ஜோஷ் தங்கையா ஆகியோர் போட்டி தொடங்கி வைத்தனர். முடிவில் விளையாட்டுப்பிரிவு செயலாளர் ரஜினிகுமார் நன்றி கூறினார்.