விருதுநகர் மாவட்டத்தில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி காளிராஜ் (48). இவர் கடந்த 2021ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் காளிராஜை கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காளிராஜுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூபாய் 2 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.