சிலிக்கன் வேலி என்றாலே ஐடி இளைஞர்களின் கனவுலகம் என்பதுதான் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் இனி சிலிக்கன் வேலி என்றாலே ‘வங்கி திவால்’ என்பதுதான் நினைவுக்குவரும்.
அமெரிக்காவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான 16வது பெரிய வங்கி சிலிக்கன் வேலி வங்கி. இந்த வங்கி நிதி நெருக்கடியால் திவால் ஆகியிருக்கிறது. நிதிநிலையைச் சமாளிக்க நிதித் திரட்டும் முயற்சிகளை எடுத்து தோல்வியுற்ற நிலையில் வங்கி திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்த வங்கியின் திவால் நிலை அமெரிக்காவின் கிராமப்புற மற்றும் பிராந்திய வங்கிகளையும் பாதித்திருக்கிறது.

சிலிக்கன் வேலி பேங்க் திவால் ஆனது உலகம் முழுவதும் அதிர்வலையை உண்டாக்கியிருக்கிறது. இந்த வங்கி பல்வேறு ஐடி நிறுவனங்களின் நிதியை நிர்வகித்து வந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடன் வழங்கியும் இருக்கிறது. தற்போது இந்த வங்கி திவால் ஆனதால் ஐடி துறை நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகும் சூழல் உருவாகியிருக்கிறது. வென்சர் கேபிடல், பிரைவேட் ஈக்விட்டி முதலீட்டாளர்களும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
அமெரிக்க அரசு வங்கிகள் பாதுகாப்பாக உள்ளன, மக்கள் பயப்படத் தேவையில்லை. திவால் ஆன வங்கியில் டெபாசிட் செய்தவர்களின் பணம் உறுதியாகத் தரப்படும் என்றும் கூறியிருக்கிறது. இந்நிலையில் இந்திய வங்கிகள் எந்த அளவுக்குப் பாதுகாப்பாக இருக்கின்றன? இங்குள்ள வங்கிகள் திவால் ஆவதற்கான வாய்ப்பிருக்கிறதா போன்ற கேள்விகள் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம்.

தலைவர் – ஆராய்ச்சிப் பிரிவு,
ஐ.டி.பி.ஐ கேப்பிடல்.
“அமெரிக்க வங்கித் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை முன்வைத்து பலரும் இந்திய வங்கிகளின் நிலைமை குறித்து கேள்வி எழுப்புகின்றனர். உலக அளவில் பார்க்கும்போது இந்திய வங்கிகள் கட்டுப்பாடான ஒழுங்குமுறைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று சொல்லலாம்.
கடந்த காலங்களில் யெஸ் வங்கி, பிஎம்சி கூட்டுறவு வங்கி, டி.ஹெச்.எஃப்.எல் (திவான் ஹவுசிங்) உள்ளிட்டவை நெருக்கடிக்குள்ளானதைப் பார்த்தோம். அப்போதெல்லாம் மேலும் வங்கி மற்றும் நிதித்துறையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. உதாரணமாக, யெஸ் வங்கியை எட்டு வங்கிகள் ஒருங்கிணைந்து கட்டுப்பாட்டில் எடுத்து காப்பாற்றியதைச் சொல்லலாம். எனவே இந்திய வங்கித் துறையில் திவால் நெருக்கடி வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. எனவே இந்திய வங்கித் துறையிலும் இதுபோன்ற நெருக்கடிகள் வருமா என்று அச்சப்படத் தேவையில்லை” என்றார்.
பங்குச் சந்தை நிபுணரும், இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவருமான வ.நாகப்பனிடமும் இதுகுறித்து கேட்டோம்.
“எஸ்விபி வங்கி திவால் அமெரிக்க வங்கித் துறையில் கணிசமான நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. ஆனால் இதனால் இந்தியாவுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றே நினைக்கிறேன். சில ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மட்டும் குறுகிய காலத்துக்குச் சிக்கல் வரலாமே தவிர நாட்டின் பொருளாதாரத்துக்கும், வளர்ச்சிக்கும் பாதிப்பு வருமா என்றால் இல்லை. தற்போது அமெரிக்க அரசு நிர்வாகம் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துவிட்டது. விரைவில் அமெரிக்காவிலும் இந்த விவகாரத்தின் தீவிரம் குறைந்துவிடும் என எதிர்பார்க்கலாம்.

அதேசமயம், வேறு ஒரு விஷயத்தைக் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். சிலிக்கன் வேலி பேங்க் திவால் ஆகியிருக்கும் பிரச்னையோடு இந்த விவகாரம் முடிந்துவிட்டால் பரவாயில்லை. ஒருவேளை இது அடுத்தடுத்து கிளம்பவிருக்கும் பல பிரச்னைகளின் ஆரம்பம் எனில், அதைப்பொருத்து பிரச்னை பூதாகரமாக வாய்ப்புள்ளது. அமெரிக்க வங்கிகள் திவால் ஆனச் செய்தி, ‘இந்திய வங்கிகள் பாதுகாப்பாக இருக்கிறதா?’ என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. அமெரிக்க வங்கிகள் போல இந்திய வங்கிகள் கடன் புத்தகம் அவ்வளவு மோசமாக இல்லை. ஏனெனில் இங்கு எல்லாவற்றையுமே முறையான விதிமுறைகளுக்குள் கொண்டுவந்திருக்கிறோம்.
அமெரிக்க வங்கிகளைப் போல இந்திய வங்கிகள் ஒரே துறை சார்ந்து தங்களது வணிகத்தை வைத்திருப்பதில்லை. எல்லா துறைகளையும் உள்ளடக்கியதாக பரவலான வணிகக் கட்டமைப்பை வைத்துள்ளன. இங்கு ஒவ்வொரு துறைக்கும் அதிகபட்ச சதவிகித வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அந்த வரம்பைத்தாண்டி வங்கிகள் கடன் வழங்காது. மேலும் ஏற்கெனவே இந்திய வங்கித் துறை பல சவாலான காலகட்டங்களைக் கடந்துவந்திருக்கிறது.

வாராக்கடன் எனும் பெரும்பிரச்னையை திவால் சட்டம், Bad Bank, கடன் தள்ளுபடி உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலமாக சமாளித்து வந்திருக்கிறது. ரிசர்வ் வங்கியும் வங்கியின் செயல்பாடுகளைக் கண்காணித்து வருகிறது. எனவே இந்திய வங்கிகளுக்குப் பெரிய ஆபத்துகள் வருவதற்கான வாய்ப்பு இல்லை. ஒருவேளை அப்படி எதுவும் பிரச்னை வந்தால் அதை சமாளிக்க அரசும் வங்கிக் கூட்டமைப்பும் எப்போதும் தயாராகவே இருக்கின்றன” என்று கூறியுள்ளார்.
இவர் குறிப்பிட்டதுபோல அமெரிக்க வங்கி திவால் பிரச்னை தொடர் பிரச்னையாக மாறாமல் இருக்க வேண்டும். ஏற்கெனவே உலகப் பொருளாதார நெருக்கடி வருவதற்கான வாய்ப்பிருப்பதாகத் தொடர்ந்து கூறப்பட்டுவரும் நிலையில் வங்கி திவால் போன்ற செய்திகள் மக்களிடையே அச்சத்தைக் கிளப்புவதில் ஆச்சர்யமில்லை!