விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்குப்பம் அருகே ஒரு லாரி ஓட்டுநர் செய்த காரியத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையை நோக்கி புதுச்சேரியில் இருந்து அந்த லாரி வந்துள்ளது. அதன் ஓட்டுனர் நல்ல மது போதையில் அதிவேகமாக லாரியை செலுத்திக்கொண்டு வந்துள்ளார். அவர் கண்மண் தெரியாமல் ஓட்டுவதை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து லாரியை நிறுத்த சொல்லி விரட்டிச் சென்றனர்.
ஆனால், இதை சற்றும் பொருட்படுத்தாத அந்த லாரி ஓட்டுநர் தொடர்ந்து லாரியை வேகமாக செலுத்திக் கொண்டே இருந்தார். இதனை தொடர்ந்து, ஒரு இளைஞர் ஓடுகின்ற லாரியை தொற்றி அதில் ஏறி லாரியை நிறுத்தும்படி ஓட்டுனரிடம் தகராறு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, லாரி நிறுத்தப்பட்ட சம்பவம் குறித்து கேள்விப்பட்ட காவல்துறையினர் விரைந்து சென்று குடிபோதையில் லாரி ஓட்டியவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது பற்றிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து இந்த சம்பவம் பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.