சென்னை: “திருச்சியில் திமுக அமைச்சருக்கும், திமுக எம்பிக்கும் இடையேயான மோதலால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட அனைவரும், சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெறுவதை தமிழக அரசு உறுதி செய்யுமா?” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தீயசக்தி திமுகவின் ஆட்சி அமைந்து 2 ஆண்டு காலம் ஆவதற்கு உள்ளாகவே அக்கட்சியின் உட்கட்சி பூசலால் எழுந்துள்ள மோதலில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருச்சியில் திமுக அமைச்சருக்கும், திமுக எம்பிக்கும் இடையேயான மோதலால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டிருக்கிறது. ரவுடிகளைப் போல திமுகவினர் திருச்சி நீதிமன்ற காவல் நிலையத்தில் புகுந்து பெண் காவலரை தாக்கியதில் அவரது கை எலும்பு முறிந்து படுகாயம் அடைந்திருக்கிறார்.
திமுகவினரின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். தீய சக்திகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான தருணத்தை மக்கள் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதில் சம்பந்தப்பட்ட அனைவரும், சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெறுவதை தமிழக அரசு உறுதி செய்யுமா?” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு, எம்பி திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் கருப்புக்கொடி காட்டினர். இதனால் ஆத்திரமடைந்த கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மே
லும், அமைச்சருக்கு கருப்புக் கொடிக் காட்டியவர்களை கைது செய்து காவல்நிலையத்தில் வைத்திருந்தபோது, காவல் நிலையத்தின் உள்ளே புகுந்தும் நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இத்தாக்குதலில் ஈடுபட்ட நேருவின் ஆதரவாளர்கள் 4 பேரை கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்த முழு விவரம் > அமைச்சர் கே.என்.நேருவுக்கு கருப்புக் கொடி; திருச்சி சிவா வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் – திருச்சியில் பரபரப்பு