ஓசூர்: இடிந்து விழும் நிலையில் உள்ள தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியின் சுற்றுச்சுவர் பாதி இடிந்த நிலையில் உள்ளது. மேலும், சுற்றுச்சுவர் கீழே விழாமல் இருக்க கருங்கற்கலைக்கொண்டு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளி வளாகத்தின் பின்புறத்தில் சுற்றுசுவர் இல்லாததால், இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. எனவே, பள்ளியின் சுற்றுச்சுவரை முழுமையாக புதிதாகக் கட்டிக்கொடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல், இப்பள்ளியில் உள்ள கழிப்பறைகளுக்கு தண்ணீர் வசதி இல்லாததால் மாணவர்கள் இதனை பயன்படுத்த முடிவதில்லை. எனவே, மாணவர்களுக்கு குடிதண்ணீர் மற்றும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.