புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீருக்கு 2023-24-ம் நிதியாண்டுக்கான ரூ.1.18 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.
இதுகுறித்து பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் கூறியதாவது: வரும் 2023-24 நிதியாண்டுக் கான ஜம்மு-காஷ்மீரின் மொத்த பட்ஜெட் மதிப்பீடு ரூ.1,18,500 கோடியாகும். இதில், மேம்பாட்டு செலவினம் ரூ.41,491 கோடியும் அடங்கும்.
வேளாண், தோட்டக்கலைக்கு ரூ.2,526.74 கோடியும், சுகாதார கல்விக்கு ரூ.2,097.53 கோடியும், ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.4,169.26 கோடியும், மின் துறைக்கு ரூ.1,964.90 கோடியும், ஜல் சக்தி திட்டத்துக்கு ரூ.7,161 கோடியும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு ரூ.2,928.04 கோடியும், கல்விக்கு ரூ.1,521.87 கோடியும், சாலை, பாலம் உள்ளிட்ட கட்டுமான பணிகளுக்கு ரூ.4,062.87 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
வரும் நிதியாண்டில் ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும் 18.36 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படவுள்ளது. நாளொன்றுக்கு தலா ஒரு குடும்பத்துக்கு குறைந்தபட்சம் 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்தாண்டில் காஷ்மீர், நாட்டின் இதர பகுதிகளுடன் ரயில் பாதை மூலமாக இணைக்கப்படவுள்ளது. மேலும், அடுத்த நிதியாண்டில் ஜம்மு-ஸ்ரீநகரில் இலகு மெட்ரோ ரயில் சேவையை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.