கல்மடுக்குள நன்னீர் மீன்பிடி:கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார உதவிகளை மாவட்ட செயலகம் ஊடாக வழங்க நடவடிக்கை

கல்மடுக்குளத்தின் கீழ் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார உதவிகள் மாவட்ட செயலகம் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கல்மடுக்குளத்தில் வாழ்வாதாரத்தினை முன்னெடுத்துவரும் 75 அங்கத்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக நேற்றையதினம் (15) கடற்றொழில் அமைச்சருடன் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கிளிநொச்சி மாவட்ட கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்மடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பமாகியுள்ளது. இதனால் குறித்த குளத்தின் நீர் முழுமையாக திறந்து விடப்பட்டுள்ள நிலையில், நன்னீர் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது தமது வாழ்வாதாரம் இழக்கப்ப்ட்டுள்ள நிலையில், தமக்கு நிவாரணம் பெற்று தருமாறும், இரணைமடு குளத்தில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு 25 பேருக்கு அனுமதி பெற்று தருமாறும் இதன்போது அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர், குறித்த இரண்டு விடயங்கள் தொடர்பாக தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் 75 நன்னீர் மீனவர்களிற்கும் மாவட்ட செயலகம் ஊடாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார்.

முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக 25 பேருக்கு இரணைமடு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுவது மற்றும் சங்கத்தினை பதிவு செய்வது தொடர்பாக பேசி 2 வாரத்திற்குள் அறிவிப்பதாகவும் இதன்போது அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.