தனியாக வாக்கிங் சென்ற பெண்ணை இளைஞர் ஒருவர் சாலையில் தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் சீதாலட்சுமி (53) என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, நடைபயிற்சி சென்றார்.
அவர் தனியாக நடைபயிற்சி மேற்கொள்வதை கண்காணித்த மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்து வந்து, உருட்டு கட்டையால் தலையின் பின்புறம் அடித்துள்ளார். இதில் சீதாலட்சுமி மயங்கி விழுந்தார்.
அவரை தரதரவென்று இழுத்து ஓரமாக போட்டுவிட்டு, இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை எடுத்துக் கொண்டு அந்த மர்ம நபர் தப்பிச் சென்றார். இதுகுறித்து சீதாலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த நபர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பழமனேரியை சேர்ந்த செந்தில்குமார் (32) என்பது தெரியவந்தது. அவர் குடிப்போதை மற்றும் கஞ்சாவுக்கு அடிமையாகி சுற்றித்திரிந்துள்ளார்.
அவரை போலீசார் பிடிக்க முயன்றபோது, திருடிய இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று தடுப்புக் கட்டையில் மோதி கீழே விழுந்தார். இதில் அவரது கால் உடைந்தது. உடனடியாக அவரை மீட்ட போலீசார், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவர் மீது வழக்குப் பதிவுச் செய்து, இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in