புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் எம்எல்ஏக்கள் பேசி முடித்த பின்னர் முதல்வர் ரங்கசாமி பதிலளித்து பேசியதாவது: ”எம்எல்ஏக்கள் அனைவரும் பட்ஜெட் உரை மீது தங்களுடைய கருத்துகளை பதிவு செய்திருக்கின்றனர். அனைவரும் பாராட்டி இருக்கிறார்கள். ஒரு சில குறைகளையும் சுட்டிக்காட்டியுள்ளதோடு, கோரிக்கைகளையும் வைத்துள்ளனர். நிச்சயமாக அனைவரின் ஒத்துழைப்போடு புதுச்சேரி மாநில வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி முழுமையாக நிதியை செலவு செய்து அத்தனை திட்டங்களையும் செயல்படுத்துவோம்.
இந்த ஆண்டு ரூ.11,600 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளோம். முக்கியமாக வேளாண்மையில் கவனம் செலுத்தியுள்ளோம். நிலம் குறைவு என்றாலும் விவசாயத்தில் உற்பத்தியை பெருக்குவது மிகவும் அவசியம். நமது மாநிலத்தில் நல்ல கல்வியை கொடுக்கின்றோம். அதுபோல் படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். சேதராப்பட்டில் உள்ள 750 ஏக்கர் நிலம் மத்திய அரசிடம் இருந்து திரும்ப பெற்றுள்ளோம். அதில் புதிய தொழிற்சாலைகள், மருத்துவ பூங்கா போன்றவை கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகின்றோம். பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கின்ற அரசு காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கையும் அரசு எடுத்துள்ளது.
போதைப் பழக்கங்களுக்கு இளைஞர்கள் அடிமையாகிக் கொண்டிருக்கின்றனர். அதனை கட்டுக்குள் கொண்டுவர காவல் துறையை பலப்படுத்த வேண்டியது அரசின் எண்ணம். இதற்காக காவல் துறையில் உள்ள பணிகளை நிரப்புவதற்கான தேர்வுகள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு என்னென்ன வழிகளில் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதை அறிந்து அதற்கு ஏற்ப நிதியை ஒதுக்கி பட்ஜெட்டை சமர்ப்பித்துள்ளேன். சுற்றுலாத் துறையை மேம்படுத்தி வருவாயை பெருக்க வேண்டும் என்பது அவசியமான ஒன்று.
கடந்தாண்டைவிட கலால் வரி, விற்பனை வரி உயர்ந்திருக்கின்றது. கடந்த ஆண்டைவிட துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எல்லாத் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்பது அரசின் எண்ணம். பஞ்சாலை தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய ஊதிய பாக்கியை கொடுத்துவிட்டு, அந்த ஆலைகளை வேறு பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியார் பங்களிப்புடன் நடத்த வேண்டும் என அரசு முடிவெடுத்துள்ளது. நலிந்த கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்த கடந்தாண்டு ரூ.30 கோடி ஒதுக்கி கொடுத்தது. அதுபோல் எல்லா கூட்டுறவு ஆலைகளையும் மேம்படுத்த நிதி ஒதுக்கப்படும்.
பட்டியலின மக்களுக்கான சிறப்புக்கூறு நிதியை முழுமையாக செலவிடுவதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தும். சமூக நலத்திட்டங்கள் உட்பட அனைத்துத் துறைகளுக்கும் இந்தாண்டு கூடுதலாக நிதி ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. மகளிருக்கு எரிவாயு சிலிண்டர் மானியம் வழங்கும் திட்டம், பிறக்கும் பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.50,000 வைப்புத் தொகையாக உடனடியாக வங்கிகளில் செலுத்தும் திட்டம் உள்ளிட்ட சமுதாயத்துக்கு நன்மை தரக்கூடிய திட்டங்களை எல்லாம் அறிவித்து அவற்றை சரியாக செயல்படுத்துவோம் என்பதை இங்கே கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
உதவித்தொகை 3 ஆயிரமாக உயர்வு: எம்எல்ஏக்களின் கோரிக்கைபடி, கணவரை இழந்த இளம் பெண்களுக்கான உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். அனைத்து பெண்களும் அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் செய்ய திட்டம் கொண்டு வரப்படும். காரைக்காலில் திடீர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.7,500 வழங்கப்படும். உற்பத்தி மானியமான ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.12,500 உடன் சேர்த்து ரூ.20 ஆயிரமாக கிடைக்கும். இதற்காக 4,119.50 ஹேக்டேர் கணக்கிடப்பட்டு, 5,137 விவசாயிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது.
மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்கள் உட்பட அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களும் பயன்பெறும் வகையில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். நுரையீரல், இதயம், கள்ளீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பிற அறுவை சிகிச்சை உள்ளட்டவைகளுக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் செல்லும் போது அதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் சான்றிதழ்படி முதல்வர் ஒப்புதலோடு மருத்துவ செலவு திரும்ப வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு ரூ. 5 கோடி ஒதுக்கப்படும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.