சினிமா உலகின் மிக உயரிய ஆஸ்கர் விருது பெற்றவர்கள் தாயகம் திரும்பினர்: பதாகைகளுடன் வரவேற்று ரசிகர்கள் வாழ்த்து..!!

டெல்லி: சினிமா உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கரை வென்று தாயகம் திரும்பியுள்ள ஆர்.ஆர்.ஆர். மற்றும்தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் படக்குழுவினருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் 14 ஆண்டுகால ஆஸ்கர் தாகத்தை தீர்த்து வைத்த இரு வேறு படக்குழுவினரும், விமானம் மூலம் தாயகம் திரும்பினர். மும்பை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் தயாரிப்பாளர் குனித் மோங்காவுக்கு ரசிகர்கள் யானைகளின் படம் பதித்த பதாகைகளை பிடித்தபடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மோங்கா, கடின போட்டிக்கு மத்தியில் இந்த விருது கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியை அளித்திருப்பதாக குறிப்பிட்டார். இத்திரைப்படம் மாயாஜாலம் போல் நாடு, வயது கடந்து உலகம் முழுவதும் உள்ளவர்களின் அன்பை பெற்று தந்திருப்பதாக தெரிவித்தார். இதேபோல் ஹைதராபாத்திற்கு விமானம் மூலம் வந்த ஆர்.ஆர்.ஆர். படத்தின் இயக்குனர் ராஜமௌலி, பாடல் இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விருது கிடைத்தது வியப்பாகவும், அதே சமயத்தில் ஒட்டுமொத்த குழுவுக்கும் சிறந்த தருணமாக இருப்பதாகவும் நாட்டு நாட்டு பாடலை பாடிய கால பைரவா தெரிவித்தார். டெல்லியில் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தெலுங்கு நடிகர் ராம்சரண், நாட்டு நாட்டு பாடலை சூப்பர் ஹிட் ஆக்கிய இந்திய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார். இது மக்களின் பாடல் என்றும் தற்போது ஆஸ்கர் விருதுக்கான வாய்ப்பை பெற்று தந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

சினிமா உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் சிறந்த அசல் பாடலுக்கான பிரிவில் ஆர்.ஆர்.ஆர். படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு விருது கிடைத்தது. இதேபோல் முதுமலை யானை பராமரிப்பு குறித்த தமிழ் குறும்படத்திற்கும் விருது பெற்று திரும்பிய படக்குழுவினருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.