திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூரை அருகே வாயலூர் குப்பத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார்-மாலதி தம்பதியினர். வீட்டை எதிர்த்து கலப்புத் திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இருப்பினும் ஆனந்தகுமாரும், மாலதியும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் தொடர்ந்து எதிர்ப்பு வந்ததுடன் உறவினர்கள் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனால் கணவன், மனைவி இருவரும் பயந்து வாழும் நிலை ஏற்பட்டது.
இந்த மிரட்டல் தொடர்பாக அவர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த கொலை மிரட்டலால் பயந்து போன ஆனந்தகுமார் வீட்டை விட்ட வெளியே செல்லாமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் மாலதி, தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அந்த மனுவில், “கலப்பு திருமணம் செய்ததால் உறவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.
இதனால் எனது கணவர் கடந்த இரண்டு வருடமாக வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டிலேயே உள்ளார். ஆகவே எனது கணவர் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.