பட்டப்பகலில் தனியாக வாக்கிங் சென்ற பேராசிரியரை அடித்து தரதரவென இழுத்து சென்ற கொள்ளையன்!!

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வஉசி சாலை பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன். இவரது மனைவி சீதாலட்சுமி (53). இவர், திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், இசிசி துறைத் தலைவராகவும் பணிபுரிந்து வருகிறார்.

இவர் வழக்கம் போல் கடந்த 12-ம் தேதி மாலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலையில் உள்ள வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தின் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, நடைபயிற்சி சென்றிருக்கிறார். இவர் தனியாக நடைபயிற்சி செல்வதை கண்காணித்த மர்ம நபர் ஒருவர் அவரை பின்தொடர்ந்து வந்து, உருட்டுக் கட்டையால் தலையின் பின்புறம் அடித்துள்ளார்.

இதில் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்த சீதாலெட்சுமியை, நாயை இழுத்துச் செல்வது போல தரதரவென்று இழுத்து ஓரமாக வீசிய அந்த நபர், சீதாலெட்சுமியின் இருசக்கர வாகனம் மற்றும் மொபைல் போனை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினார்.

இது குறித்து சீதாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கண்ட்டோன்மெண்ட் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பழமனேரியை சேர்ந்த செந்தில்குமார் (32) என்பதும், குடிப்போதை மற்றும் கஞ்சாவுக்கு அடிமையான செந்தில்குமார், தற்போது தாராநல்லூர் கீரைக்கடை பஜாரில் தங்கியிருப்பதும் தெரிய வந்தது.

அதையடுத்து அவரை போலீசார் பிடிக்க முயன்றபோது, திருடிய இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று தடுப்புக் கட்டையில் மோதி கீழே விழுந்தார். இதில் அவரது கால் உடைந்தது. உடனடியாக அவரை மீட்ட போலீசார், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், இது குறித்து அவர் மீது வழக்குப் பதிவுச் செய்து, இருசக்கர வாகனம் மற்றும் மொபைல் போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், தனியாக நடைப்பயிற்சி மேற்கொண்ட சீதாலட்சுமியை செந்தில்குமார் தாக்கி, அவரை தரதரவென்று தார்ச்சாலையில் இழுத்துச் செல்லும் காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.