TN Budget 2023: 7ஆவது ஊதியக்குழு அறிவிப்பு? பட்ஜெட் எத்தனை மணிக்கு…? – முழு விவரம் இதோ!

TN Budget 2023 When And Where To Watch Live: 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நாளை (மார்ச் 20) தாக்கல் செய்ய உள்ள நிலையில், இக்கூட்டத்தொடரில் மகளிருக்கு உரிமை தொகை அறிவிப்பு மற்றும் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எத்தனை மணிக்கு பட்ஜெட் தாக்கல்?

தமிழ்நாட்டின் நிதி நிலைமை தொடர்பான அறிக்கையை  சட்டப்பேரவையில் ஒவ்வொரு ஆண்டும் நிதி அமைச்சர் தாக்கல் செய்வார். அந்த வகையில் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நாளை காலை காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில்  தாக்கல் செய்யவுள்ளார்.

பட்ஜெட்டை எதில் பார்ப்பது?

தமிழ்நாடு பட்ஜெட் தற்போது காகிதமில்லாமல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, சட்டப்பேரவை நிகழ்வுகள் தற்போது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. தமிழ்நாடு அரசின் TNDIPR யூ-ட்யூப் பக்கத்திலும் மக்கள் பட்ஜெட் உரையை நேரடியாக காணலாம். 

பட்ஜெட் தாக்கலுக்கு பின்…

பேரவையில் நிதித்துறை அமைச்சர் பட்ஜெட் உரையை  வாசிப்பார். இதை தொடர்ந்து  சட்டசபை நிகழ்வுகள் ஒத்திவைக்கப்படும். இதன் பின்னர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில், சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? அதில் என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும்? என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

வேளான் பட்ஜெட்

திமுக ஆட்சி பொறுப்பெற்ற பின்பு வேளாண்மைக்கான தனி நிதி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இந்தாண்டுக்கான வேளாண் நிதி அறிக்கை தாக்கல் செய்வது உள்பட அனைத்து அலுவல்கள் குறித்தும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில்தான் முடிவு செய்யப்படும். இதனை சபாநாயகர் அப்பாவு அதிகாரபூர்வமாக அறிவிப்பார்.

எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகள்

இந்த பட்ஜெட்டில், பெண்களுக்கான உரிமைத் தொகையாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட உள்ளது. மேலும், இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, அதனால் பயனடையும் பெண்கள் பற்றிய விவரங்கள் அப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 7ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த அறிவிப்புகளும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீது சில கேள்விகளை முன்வைத்ததோடு, இச்சட்டத்தை கொண்டு வருவதற்கு தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி அதற்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார். இது கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் இந்த மசோதா மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட‌ உள்ளது. 

பிற அறிவிப்புகள்

மேலும், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு பேரவையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் அரசின் கடன் அதிகரித்து வந்த நிலையில், அதை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ள நிதிநிலை அறிக்கையில், அரசினுடைய நிதிநிலைமையை சீர் செய்வதற்கு அரசு எடுத்து வரும் முயற்சிகள், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு எதிர்கால நிதி மேலாண்மை குறித்த விபரங்களும் நிதிநிலை அறிக்கை உரையில் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.