அடக்கம் செய்த உடலை மீண்டும் தோண்டி எடுத்த காவல்துறை.. பல்லடம் அருகே பரபரப்பு!

பல்லடம் அருகே தற்கொலை செய்து கொண்டவரின் புதைக்கப்பட்ட உடலை மீண்டும் தோண்டி எடுத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மேற்கு பல்லடத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி விஜயா. இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மகளும் ஜனகராஜ் மற்றும் சரவணன் ஆகிய மகன்களும் உள்ளனர். நேற்று முன்தினம் முருகன் மற்றும் விஜயா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கை மற்றும் ஒரு கால் செயல்படாத நிலையில் அவதிப்பட்டு வந்த முருகன், மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினைக்குப் பின் பல்லடம் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர், வீடு திரும்பிய அவர் தனது அறைக்குச் சென்று உறங்கியுள்ளார். நேற்று காலை முருகன் தங்கியிருந்த அறை நீண்ட நேரமாகத் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவரது மகள் பாக்கியலட்சுமி, அறையை திறந்து பார்த்தபோது முருகன், தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
image
இதையடுத்து, முருகனின் குடும்பத்தார் காவல் துறைக்கு எந்த தகவலும் அளிக்காமல் நேற்று மாலை அவரது உடலை ஜே.கே.ஜே. காலனி மாணிக்காபுரம் சாலையில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்துள்ளனர். இந்த நிலையில், இன்று காலை முருகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பல்லடம் காவல் துறைக்கு தெரியவந்தது. இதையடுத்து, முருகனின் குடும்பத்தினரை அழைத்து புதைக்கப்பட்ட அவரது உடலை மீண்டும் தோண்டி எடுக்க முடிவு செய்தனர்.
அதன்படி தொடர்ந்து பல்லடம் வட்டாட்சியர், பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர், பல்லடம் காவல் ஆய்வாளர், பல்லடம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஆகியோர் முன்னிலையில் புதைக்கப்பட்ட முருகனின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் முருகன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் பல்லடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.