ஆசியாவின் முதல் முழுமையான கைகள் மாற்று அறுவை சிகிச்சை – சாதித்த மும்பை மருத்துவர்கள்!

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரை சேர்ந்தவர் 33 வயதான பிரேம ராம். இவர், ஆசியாவிலேயே முதன்முறையாக, இரண்டு கைகளையும் மாற்று அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பெற்றவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இந்தியாவின் மருத்துவ மைல் கல்லாகப் பார்க்கப்படும் இந்த சாதனையை, மும்பையைச் சேர்ந்த குளோபல் மருத்துவமனை மருத்துவர்கள் குழு 16 மணி நேரம் தொடர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நிகழ்த்திக் காட்டியுள்ளனர். 

கைகள் மாற்று அறுவை சிகிச்சை

பத்து வருடங்களுக்கு முன்பு ராம், வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது தெரியாமல் மின்கம்பிகளைத் தொட்டதால் இவரது கையில் மின்சாரம் பாய்ந்து விபத்தில் சிக்கினார். கைகளில் பெரும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட ராம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டுமானால் இரு கைகளையும் அகற்ற வேண்டுமென அப்போது மருத்துவர்கள் தெரிவித்ததால்,  ராமின் இரு கைகளும் தோள்பட்டை வரை முற்றிலுமாக அகற்றப்பட்டன.

பிறகு, ராமின் குடும்பத்தினர் அவருக்குச் செயற்கை கைகளைப் பெற முயன்றனர். ஆனால் அது அவருக்குப் பொருந்தவில்லை. ராம் முற்றிலுமான தன் இரு கைகளையும் இழந்ததால் தன் அன்றாட சிறு தேவைகளுக்குக்கூட பிறரின் உதவியை எதிர்பார்க்கும் சூழலில் இத்தனை வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளார். 

விபத்து பற்றி பேசியுள்ள பிரேம ராம், “எனது இரண்டு கைகளையும் இழந்ததை பேரிழப்பாகக் கருதினேன். துண்டிக்கப்பட்ட கைகளைக் கையாள்வதை விட இதனால் ஏற்பட்ட மனச்சோர்வுதான் மிகவும் அதிகமான இருந்தது. இந்தச் சூழல் பெரும் சவாலாக இருந்தது. அப்போது இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் நான் போராடினேன். அன்றாட வாழ்வில் என் சிறுவேலைகளைச் செய்யவும் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உதவியை நாட வேண்டி இருந்தது.

கைகள் மாற்று அறுவை சிகிச்சை

என் உடலில் இயலாமை இருந்தும் மனம் தளரவில்லை. இந்தப் பிரச்னைக்கு ஏதாவது தீர்வு கிடைக்கும் என்று நம்பினேன். பிற சாதாரண மனிதர்களைப் போல என் தேவைகளை நானே செய்து கொள்ள விரும்பினேன். இதனால் என் கால்களில் பேனாவைப் பிடித்து எழுதக் கற்றுக் கொண்டேன். பிற பொருள்களையும் கால்களால் கையாள பழகினேன். சமீபத்தில்தான் என் பி.எட் தேர்வுகளை முடித்தேன். 

இந்நிலையில் தான், குளோபல் மருத்துவமனை மருத்துவர்கள் எனக்கு மாற்று  அறுவை சிகிச்சை மூலம் வேறு கைகளைப் பொருத்தி உள்ளனர். இந்த உலகில் முடியாதது என்று எதுவும் இல்லை என்பதை நான் ஆழமாக நம்புகிறேன். அதற்கு நானே தற்போது சாட்சியாகியுள்ளேன். எனக்குப் புதிய கைகள் வழங்கிய குளோபல் மருத்துவர்கள் குழுவுக்கு பெரும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார். 

ராமுக்கு தற்போது பிசியோதரப்பி சிகிச்சைகள் தரப்பட்டு வருகின்றன. அடுத்த 18 முதல் 24 மாதங்களுக்கு இந்த சிகிச்சை தொடரும். அவர் 18 மாதங்களில் கணிசமான கை செயல்பாட்டை அடைவார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.