எதிரி சொத்துகளை விற்க உள்துறை நடவடிக்கை

புதுடெல்லி:  பாகிஸ்தான்,சீனா பிரஜைகள் இந்தியாவில் விட்டு சென்ற சொத்துகளை விற்பதற்கான நடவடிக்கையை  ஒன்றிய உள்துறை துவக்கி  உள்ளது.  நாடு சுதந்திரம் பெற்றபோது இந்தியாவிலிருந்து பாகிஸ்தானில் குடியேறிவர்களின் அனைத்து விதமான சொத்துகளை நிர்வாகம் செய்வதற்காக, ஒன்றிய அரசால் எதிரி சொத்து சட்டம், நடைமுறைப்படுத்தப்பட்டது. இச்சட்டப்படி பாகிஸ்தான், சீனாவில் குடியேறியவர்களின் சொத்துக்களை கைப்பற்றி பராமரிக்க, இந்திய அரசு சில முகவர்களை பாதுகாவலர்களாக நியமித்தது. இந்தியாவில் உள்ள 20 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் உள்ள  எதிரி சொத்துகள் குறித்து  கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய உள்துறை உத்தரவிட்டுள்ளது.

நாட்டில்  மொத்தம் 12,611  எதிரி சொத்துகள் இருக்கின்றன. இந்த சொத்துகளின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடி. ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையின்படி,   மாவட்ட கலெக்டர்கள், துணை ஆணையர்களின் உதவியுடன்  எதிரி சொத்துகளில் இருப்பவர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,‘‘ எதிரி சொத்துகளான  பங்குகள் மற்றும் தங்கம் போன்ற அசையும் சொத்துகள்  விற்பனையில் அரசு ரூ.3,400 கோடி ஈட்டியுள்ளது. ஆனால்,12,611  அசையா சொத்துகள் எதுவும் விற்கப்படவில்லை. இதில்,12,485 சொத்துகள் பாகிஸ்தான் நாட்டினர்,126 சொத்துகள் சீன பிரஜைகளின் தொடர்புடையது. அதிகபட்சமாக உபி.யில் 6,255ம்,மேற்கு வங்கத்தில் 4,088, டெல்லியில் 659 சொத்துகளும் இருக்கின்றன. மேலும் கேரளாவில் 71, உத்தரகாண்டில் 69, தமிழ்நாட்டில் 67 எதிரி சொத்துகள் உள்ளன’’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.