பெண்களின் முன்னேற்றமே தேசத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்: மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கருத்து

சென்னை: பெண்களின் முன்னேற்றமே தேசத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்தார். தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலை.

வளாகத்தில் நேற்று நடைபெற்றது. தமிழக ஆளுநரும், பல்கலை. வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். இதில் 107 பி.எச்டி. உட்பட மொத்தம் 7,754 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும்,பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 58 பேருக்கு தங்கப் பதக்கங்களும் அளிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பேசியதாவது: விளையாட்டு நமது உடல்நலனைக் காப்பதுடன், ஒழுக்கத்தைக் கற்றுத் தருகிறது. விளையாட்டில் நாம் கற்றுக் கொள்ளும் அம்சங்கள், வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு செல்ல உதவுகிறது.

விளையாட்டில் நாம் சந்திக்கும் தோல்விகள் வெற்றி பெறுவதற்கான மனஉறுதியை வழங்கும். எனவேதான் விளையாட்டுத் துறையைச் சார்ந்தவர்கள் எந்தப்பொறுப்புக்கு சென்றாலும், மனதளவிலும் உடலளவிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவார்கள்.

தமிழகத்தில் கபடி, சிலம்பம்உட்பட பல்வேறு பழமையான விளையாட்டுகள் உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், சரத் கமல் உள்ளிட்ட பலர் உலகஅளவில் பல்வேறு விளையாட்டுகளில் சாதனை படைத்துள்ளனர். கேலோ திட்டங்களின் மூலம் பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, இளம் வீரர்களுக்கு தேசிய அளவில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

காமன்வெல்த், ஒலிம்பிக், தாமஸ் கோப்பை என பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வென்று, நாட்டுக்குப் பெருமை தேடித் தந்துள்ளனர். தற்போது விளையாட்டு, கல்வி என அனைத்துத் துறைகளிலும் பெண்கள் தலைசிறந்து விளங்குகின்றனர். பெண்களின் முன்னேற்றமே தேசத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இவ்வாறு மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துறைச் செயலர் அதுல்யா மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.