மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் திமுக வைத்திருக்கும் மறைமுக செக் – வலுக்கும் எதிர்ப்பு!

TN Budget 2023: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குடும்ப தலைவிகளுக்கான ரூ. 1000 என்ற மாத உரிமைத்தொகை திட்டத்தை இந்தாண்டு அமல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 

இதில், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியான நிலையில், திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்த பல அறிவிப்புகளையும் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது. குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000, தகுதியான குடும்பத்தலைவிகளுக்கு இந்த நிதியாண்டு முதல் வழங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இத்திட்டம், முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளான செப். 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு, ரூ. 7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாளாக எதிர்பார்க்கப்பட்ட இந்த திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குடும்பத்தலைவிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி, குடும்பத்தலைவிகளுக்கு மற்றொரு சிறப்பு திட்டமாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் வழங்கும் திட்டம் செப். 15ஆம் தேதி அன்று முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எதன் அடிப்படையில் தகுதி?

இது மிகவும் புரட்சிக்கரமான திட்டம் என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் அறிவித்த நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதனை கடுமையாக மறுத்துள்ளார். “தேர்தல் அறிக்கையில், ரேசன் கார்டுகள் உள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என கூறி வாக்குகளை பெற்ற ஆட்சிக்கு வந்த பின், தகுதியானவர்களுக்கு உரிமைத்தொகை என்ற அறிவிப்பு ஏற்கக்கூடியது அல்ல.

எதன் அடிப்படையில் தகுதியை நிர்ணயிக்கிறார்கள் என்பதையும் அவர்கள் அறிவிக்கவில்லை. மேலும், இதற்கு ஒதுக்கியுள்ள நிதியால் சுமார் 1 கோடி மகளிருக்குக் கூட உரிமைத்தொகையை கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை. தாங்கள் வெளிநடப்பு செய்ததால், நிதிநிலை அறிக்கை புத்தகம் கிடைக்கப்பெறவில்லை. இதனால், எங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து சரியாக தெரியவில்லை” என்றார், எடப்பாடி பழனிசாமி.   

நம்பிக்கை துரோகம்

இதுகுறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக அரசு தங்களை நம்பி வாக்களித்த இல்லத்தரசிகளுக்கு நம்பிக்கை துரோக்கத்தை செய்துள்ளதாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார்.  அதாவது, “மொத்தமுள்ள 2 கோடிக்கும் மேற்பட்ட ரேசன் கார்டுகளுக்கு உரிமைத்தொகையை வழங்க வேண்டும் என்றால், ஆண்டுக்கு சுமார் ரூ. 24 ஆயிரம் கோடி தேவைப்படும். ஆனால், 7,000 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கப்பட்டது ஏற்கக்கூடியது அல்ல” எனவும் கூறியுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.