லண்டன் இந்திய தூதரகத்தில் இந்திய தேசியக்கொடி அவமதிப்பு: காலிஸ்தான் கொடி ஏற்றம் – அதிர்ச்சி சம்பவம்

லண்டன்,

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 23-ந்தேதி, காலிஸ்தான் ஆதரவு மத போதகரான அம்ரித்பால் சிங்கின் (வயது 29) ஆதரவாளர்கள், அஜ்னாலாவில் உள்ள காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, சிறையில் உள்ள அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளரை விடுவிக்க முயன்றனர். இந்த சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வாரிஸ் பஞ்சாப் டி காலிஸ்தான் ஆதரவு அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் செயல்பட்டு வருகிறார்.

காவல்நிலையத்தை வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் முற்றுகையிட்ட அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் தங்கள் ஆதரவாளரை விடுவிக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. மேலும், பஞ்சாப்பில் காலிஸ்தான் ஆதரவு குழுக்களும் அதிகரிக்கத்தொடங்கின.

இதையடுத்து, பஞ்சாப் மாநிலத்திற்கு துணை ராணுவப்படையினர் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை காலிஸ்தான் ஆதரவாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பஞ்சாப் போலீசார் களமிறங்கினர்.

இந்த நடவடிக்கையில் 110க்கும் மேற்பட்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேவேளை, காலிஸ்தான் ஆதரவாளரான வாரிஸ் பஞ்சாப் டி தலைவன் அம்ரித்பால் சிங் தப்பியோடி தலைமறைவாக உள்ளார். அம்ரித்பாலை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன் இன்று குவிந்த காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், லண்டன் இந்திய தூதரகத்தில் ஏற்றப்பட்டிருந்த இந்திய தேசியக்கொடியை அகற்றி காலிஸ்தான் கொடியை ஏற்றினர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. லண்டன் இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இருந்ததால் அங்கு சென்ற காலிஸ்தான் ஆதரவாளர்கள் அம்ரித்பாலுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி தூதகரத்தில் கொடிக்கம்பத்தில் பறந்துகொண்டிருந்த இந்திய தேசியக்கொடியை கீழே இறக்கி காலிஸ்தான் கொடியை பறக்கவிட்டனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்பவம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி இங்கிலாந்து வெளியுறவுத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காலஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய தேசியக்கொடியை இறக்கிய நிலையில் அங்கு சென்ற போலீசார் காலிஸ்தான் ஆதரவாளர்களை அப்புறப்படுத்தினர். அதன்பின்னர், லண்டன் தூதரகத்தில் இந்திய தேசியக்கொடி மீண்டும் பறக்கவிடப்பட்டது. மேலும், தூதரக கட்டிடத்தில் மிகப்பெரிய அளவில் இந்திய தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.