ஸ்டாலின் புகைப்பட கண்காட்சி: திமுக-வுக்கு தேர்தல் பிரசாரம் ; `காலம் பதில் சொல்லும்' – நடிகர் வடிவேலு

“முதலைமைச்சரிடம் எனக்கு பிடித்த விஷயம் அவரோட எளிமைதான். அவர் முதலமைச்சரா வந்தது எங்களுக்கெல்லாம் சந்தோசமா இருக்கு.” என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் சிறைக் காட்சியை பார்வையிட்டபோது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டுகால பொது வாழ்க்கை பயணம் குறித்த புகைப்பட கண்காட்சி மதுரை ஒருங்கிணைந்த மாவட்டங்களின் சார்பில் நேற்று(19-03-2023) தொடங்கியது. நேற்று காலை அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில் மீனாட்சியம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் திறந்து வைத்தார்.

மதுரை திருப்பாலை அருகே நடைபெறும் இந்த பிரமாண்ட கண்காட்சியில் முதலமைச்சரின் 70 ஆண்டுகால பொது வாழ்க்கையில் அவர் சந்தித்த சவால்கள், மேற்கொண்ட போராட்டங்கள், மதுரையுடன் தொடர்புடைய புகைப்படங்கள், தத்ரூப காட்சி வடிவமைப்புகள் என பிரமாண்டமான முறையில் குளிரூட்டப்பட்ட அரங்கில் அமைக்கப்பட்டுள்ளது.

புகைப்பட கண்காட்சியில்

10 நாட்கள் நடைபெறவுள்ள இந்த கண்காட்சி தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கண்காட்சியை பார்வையிட திரைப்பட நடிகர் வடிவேலு வந்திருந்தார். பின்பு செய்தியாளர்களிடம் வடிவேலு பேசும்போது, “எனக்கு மிகப்பெரிய பிரமிப்பா இருக்கு. முதலைமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்களின் 70 ஆண்டு வாழ்க்கை பயண புகைப்பட கண்காட்சிக்கு வர அமைச்சர் சேகர் பாபுவும், அமைச்சர் பி.மூர்த்தியும் அழைப்பு விடுத்தார்கள். இதை பார்க்கும்போது எனக்கு பிரமிப்பா இருக்கு.

கருமுத்து கண்ணன் திறந்து வைத்தபோது

இங்கு பார்த்ததெல்லாம் சத்தியமா படம் கிடையாது. அனைத்தும் நிஜம். அவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாக வைக்கப்பட்டுள்ளது. பார்த்தபோது நெஞ்சமெல்லாம் நெகிழுது. ஒரு மனுசன் பக்கத்து வீட்டுல சண்டை போட்டால் கூட தாங்க மாட்டான். வீட்டை காலி பண்ணிட்டு போயிடுவான். ஆனால், அனைத்தையும் தாங்கிக்கொண்டு ஒரு போராளியா அரசியல்ல வெற்றி பெற்றிருக்காருன்னா சாதாரணமானது இல்லை. இதைவிடக் கல்வி வேற இல்லை. இதெல்லாம் மாணவர்கள், இளைஞர்களுக்கு பாடமா அமைஞ்சிருக்கு. அவருடைய தைரியமும், தன்னம்பிக்கையும், உழைப்பும்தான் தமிழ்நாட்டின் முதலைமைச்சார ஆக்கியிருக்கு. பெருமையா இருக்கு. சிறையில இம்புட்டிக்கானு அறையில, ஆறுக்கு ஆறு அறையில வச்சு அவரை கொடுமை படுத்தியிருக்காங்க. கல்யாணம் ஆன பத்தாவது நாள் இவரையும், சிட்டிபாபு அண்ணனயும் பிடிச்சிட்டு போயிருக்காங்க.

படமும் கதை சொல்லும்பாங்க. அதை இங்க பார்த்தேன். இந்த மாபெரும் கண்காட்சி எல்லா மனிதருக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் உண்டாக்குற மாதிரி அமைஞ்சிருக்கு. சென்னையில புகைப்படக்கண்காட்சி நடந்ததுக்கு அழைச்சது மாதிரி இங்கேயும் அழைச்சிருக்காங்க. அவர் எல்லா தலைவரோடும் இருக்குற படங்கள் இங்கே இருக்கு. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மாவோடு இருக்கிற படமும் இருக்கு. இந்தியாவுல எல்லா தலைவரோடும் நெருக்கமா பழகி புகழை சம்பாதிச்சு வச்சிருக்கார். அவர் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்ந்து மக்களுக்கு நல்லது செய்யணும்.

இந்த கண்காட்சியை எல்லோரும் வந்து பார்க்கணும். இதை நம்ம வாழ்க்கையில பாடமா எடுத்துக்கணும். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதில் மனதை பாதித்தது அந்த சிறைச்சாலை சம்பவம்தான். அதைப்பற்றி புத்தகம் உள்ளது.

கண்காட்சியில்

சகோதரர் உதயநிதி ஸ்டாலினோடு மாமன்னன் படத்துல நடிச்சேன். அந்த சம்பவத்தை படமா எடுத்திருந்தா அவர் சாக பிழைத்த வரலாறு எல்லோருக்கும் தெரிந்திருக்கும். முதலமைச்சரிடம் எனக்கு பிடித்த விஷயம் அவரோட எளிமைதான். அவர் முதலமைச்சரா வந்தது எங்களுக்கெல்லாம் சந்தோசமா இருக்கு. கொரோனா காலத்துல அவர் செஞ்ச பணிகளை மறக்க முடியாது. அதையெல்லாம் இங்க அதிகமாக வச்சிருக்கலாம். இந்த கதையெல்லாம் உதயநிதி ஸ்டாலினால்தான் நடிக்க முடியும்” என்றவரிடம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு பிரசாரம் செய்வீர்களா என்று கேட்டதற்கு, அது தொடர்பாக அடுத்து, அடுத்து என்று கேட்டவர், “இது எல்லாவற்றுக்கும் ஒரே பதில்தான் …காலம் பதில் சொல்லும்” என்று கூறிவிட்டு கிளம்பினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.