11 வயது மகனை 17 மணிநேரம் வீடியோ கேம் விளையாட வைத்த தந்தை; என்ன காரணம் தெரியுமா?!

குழந்தைகளிடையே மொபைல் போன்களின் பயன்பாடு அதிகமாகி உள்ளது. மொபைல் போன்களில் ஒரு கேமை விளையாடும் சிறுவர்கள், கூடிய விரைவிலேயே அதற்கு அடிமையாகிப் போகின்றனர். விளைவு, பெற்றோருக்குத் தெரியாமல், அனைவரும் தூங்கும் நேரத்தில் மொபைலை பயன்படுத்துகின்றனர்.

மொபைல்

இப்படி தன்னுடைய மகன், இரவு நேரத்தில் வீடியோ கேம் விளையாடியதற்காக, தந்தை ஒருவர் கொடுத்த தண்டனை அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

சீனாவின் ஷென்சென் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன், இரவு 1 மணிக்கு யாருக்கும் தெரியாமல் தன்னுடைய படுக்கையில், மொபைல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டு இருந்திருக்கிறான். இதனைக் கண்டறிந்த அவன் தந்தை ஹுவாங், மகனுக்குப் பாடம் புகட்ட முடிவு செய்திருக்கிறார்.

அதிக நேரம் ஸ்மார்ட் போன் திரையைப் பார்ப்பதால் உண்டாகும் விளைவுகள் என்னென்ன என்பதை புரிய வைப்பதற்காக, தன்னுடைய மகனைத் தூங்க விடாமல் தொடர்ந்து வீடியோ கேம் விளையாட வைத்திருக்கிறார்.

ஒரு மணி நேரமல்ல, இரண்டு மணிநேரமல்ல… சுமார் 17 மணி நேரம் மகனை வீடியோ கேம் விளையாட வைத்திருக்கிறார்.

மன்னிப்பு கேட்டும் மகனை விடவில்லை. இறுதியாக, முடியாமல் போய் மகன் வாந்தி எடுத்த பிறகே, அவனது தண்டனையை முடித்திருக்கிறார். முக்கியமாக இந்த நிகழ்வுகள் அனைத்தையும் பதிவு செய்து, சீனாவின் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மொபைல் கேம்

வீடியோ கேம்களை விளையாடுவதற்காக நீண்ட நேரம் விழித்திருந்ததற்காக, மன்னிப்பு கேட்டு தன்னுடைய கம்ப்யூட்டரில் குறிப்பு ஒன்றை எழுதி உள்ளான், சிறுவன். அதில்,

“வீடியோ கேம் விளையாடுகையில் தந்தை என்னைக் கண்டுபிடித்து, தண்டித்தார். எனக்கு வாந்தி வரும் வரை விளையாட வைத்தார். நான் பல முறை எழுந்தேன். எப்படியும் நாள் முழுதும் இருக்கும். நள்ளிரவு 1 மணி முதல் மாலை 6 மணி வரை, 17 மணி நேரம் விளையாடினேன்.

நான் 11 மணிக்கு முன் படுக்கைக்கு செல்வேன் என உறுதியளிக்கிறேன். படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு மொபைல் கேம் மற்றும் பொம்மைகளுடன் விளையாட மாட்டேன்’’ என எழுதி இருக்கிறான்.

தந்தையின் இந்த கடுமை சமூக வலைதள வாசிகளிடம் மாறுபட்ட கருத்தைக் கிளப்பியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.