'ஆர்ஆர்ஆர்' ஆஸ்கர் விருதுக்காக நான் செலவு செய்யவில்லை – தயாரிப்பாளர் டிவிவி தனய்யா

ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது.

ஆஸ்கர் விருதுக்காக புரமோஷன் செய்வதற்கு ராஜமவுலி சுமார் 80 கோடி வரை செலவு செய்தார். விழாவில் கலந்து கொள்ள 20 லட்ச ரூபாய் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கித்தான் கலந்து கொண்டார் என்ற செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான டிவிவி தனய்யா யு டியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அது பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ளார். “ஆர்ஆர்ஆர்' படம் தயாரிக்க 450 கோடி வரை செலவானது. படம் வெளியிட்ட பின் நான் திருப்தியாகத்தான் இருக்கிறேன். அவ்வளவு கோடி வசூலானலும் எனக்கு பல செலவுகளுக்குப் பிறகான லாபம்தான் கிடைத்தது. 'ஆஸ்கர் விருது'களுக்காக நான் எந்த ஒரு தொகையையும் செலவு செய்யவில்லை. ஆனால், ராஜமவுலி செலவு செய்தாரா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது,” என்று சொல்லியுள்ளார்.

ஆஸ்கர் விருதுகளுக்காக செலவு செய்யும் மனநிலையில் டிவிவி தனய்யா இல்லை என்றும், உலக அளவில் தனது பெயர் பரவ ராஜமவுலிதான் அவரது சொந்த பணத்தை செலவு செய்துள்ளார் என்றும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்கர் விருது சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் எதிலும் டிவிவி தனய்யா கலந்து கொள்ளாதது பற்றி தெலுங்கு ஊடகங்களும் குறிப்பிட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.