சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு 50,000 ஏக்கரில் சிறுதானிய சாகுபடி: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு 50,000 ஏக்கரில் சிறுதானிய சாகுபடி மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வேளாண் பட்ஜெட் 2023-24-ஐ அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில் அவர் வெளியிட்ட அறிவிப்பு: “கம்பு, கேழ்வரகு, வரகு, சோளம், பனி வரகு, தினை, குதிரைவாலி, சாமை ஆகியவை சிறு, குறு தானியங்கள். சிறு தானியங்கள் வறட்சியிலும் வளர்பவை. வளமற்ற மண்ணிலும் நலம்பெற்று துளிர்ப்பவை. ஊட்டச்சத்து நிறைந்தவை. தமிழ்நாட்டில் அவற்றை மீண்டும் செழிக்கச் செய்யும்பொருட்டும், சிறுதானிய பரப்பு, உற்பத்தி, நுகர்வு ஆகியவற்றை அதிகரிக்கும் பொருட்டும், கடந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் 20 மாவட்டங்களை உள்ளடக்கி அறிவிக்கப்பட்ட இரண்டு சிறு தானிய மண்டலங்களுடன் உழவர்களின் கோரிக்கைகளை ஏற்று, நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்கள் புதிதாகச் சேர்த்துக்கொள்ளப்படும்.

சிறுதானியப் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், நீலகிரி, தருமபுரி மாவட்டங்களிலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கச் செய்திட கூட்டுறவு சங்கங்கள் மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட குறு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு சென்னை, கோயம்புத்தூர் மாநகர அமுதம், சிந்தாமணி, காமதேனு கூட்டுறவு விற்பனை அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அறிவித்திருப்பதை ஒட்டி, தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த இயக்கத்தில், வரும் ஆண்டில், தரிசு நிலங்களை சீர்திருத்தம் செய்தும், மாற்றுப் பயிர் சாகுபடி மூலமாகவும் 50,000 ஏக்கரில் சிறுதானிய சாகுபடி மேற்கொள்ளவும், சிறுதானிய விவசாயிகளை ஒன்றிணைத்து 100 சிறுதானிய உற்பத்திக் குழுக்களை உருவாக்கி பயிற்சி அளிப்பதற்கும், 12,500 ஏக்கரில் தெளிப்பு நீர்ப்பாசனம் அமைக்கவும் மானியம் அளிக்கப்படும். சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய ஏதுவாக சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள் அமைக்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய உதவி அளிக்கப்படும்.

மக்களிடையே சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு “சிறுதானிய திருவிழாக்களும்” இவ்வியக்கத்தின் மூலம் நடத்தப்படும். வரும் ஆண்டில், மத்திய, மாநில அரசு நிதி உதவியுடன் 82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. சிறுதானிய உற்பத்தி, நுகர்வு ஆகியவற்றை அதிகரிக்கும் வகையில் முக்கிய சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு போன்றவற்றை நேரடியாக கொள்முதல் செய்து, நியாய விலைக்கடைகளில் சிறுதானியங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும். அரசு நிறுவனங்கள், கல்வி நிலைய விடுதிகளில், சத்துள்ள சிறுதானிய உணவு அளிக்கப்படும்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.