“தற்கால இந்திய அரசியலின் மிர் ஜாஃப்ர்” – ராகுல் காந்தி மீது பாஜக புதிய விமர்சனம்

புதுடெல்லி: காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியை மிர் ஜாஃபருடன் ஒப்பிட்டு அவர் மீது புதிய விமர்சனத் தாக்குதல் ஒன்றை பாஜக தொடுத்துள்ளது.

பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் நாட்டை அவமானப்படுத்தியுள்ளார். அவர் தற்கால இந்திய அரசியலின் மிர் ஜாஃபர்.

மிர் ஜாஃபர் செய்த வேலையையே ராகுல் காந்தி செய்கிறார். மிர் ஜாஃபர், அப்போதைய கிழக்கிந்திய கம்பெனியின் உதவியைப் பெறுவதற்காக, 24 பர்கானாக்களை வழங்கினார். அதையேதான் ராகுல் காந்தியும் இப்போது செய்துள்ளார். இந்தியாவின் இளவரசனாக வருவதற்கு வெளிநாடுகளின் உதவியை நாடியுள்ளார். நாட்டை அவமானப்படுத்தி, அந்நிய சக்திகள் இந்தியாவில் தலையிட வேண்டும் என்று ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இது ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸின் சதிச் செயலாகும். நாடாளுமன்றத்தில் குறைவான நாட்களே பங்கேற்று விட்டு, என்னை யாரும் பேச அனுமதிக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டி வருகிறார்.

விவாதம் என்பது ஜனநாயகத்தின் ஆன்மா. கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து ராகுல் காந்தி 6 விவாதங்களில் மட்டுமே பங்கேற்றுள்ளார். அவர் நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்பதில்லை. அதேபோல், அவருக்கு எப்படி பேச வேண்டும் என்பதும் தெரியவில்லை. துரதிர்ஷ்டவசமாக தான் ஒரு எம்பி என்கிறார். அவர் ஜெய்ராம் ரமேஷின் உதவியுடனேயே பேசுகிறார்” என்று பத்ரா தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் பவன் கேரா, “விவாதங்கள் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தாது மாறாக பலப்படுத்துகின்றன. ஆனால், எதிர்க்கட்சிகளின் கேள்விகளில் இருந்து தப்பிக்க ஆளுங்கட்சி இந்த நாடகத்தை நடத்தி வருகிறது. அவர்கள் அதானியுடனான பிரதமரின் நட்பை பற்றி ராகுல் காந்தி மீண்டும் கேள்வி கேட்டு விடுவார் என்று பயப்படுகிறார்கள். அதனால், இப்படி செய்கிறார்கள்.

பாஜகவின் மிர் ஜாஃபர் கருத்துக்கு விரைவில் பதில் அளிக்கப்படும். நாங்களும் இப்போதுதான் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று அவர்களிடமிருந்து (பாஜக) கற்றுக்கொண்டிருக்கிறோம். விரைவில் பாஜக கருத்துக்கு பதிலளிக்கப்படும்” என்றார்.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “அவர்கள் விரும்புகிற வரையில் எத்தனை முறை வேண்டும் என்றாலும் மன்னிப்புக் கேட்க கோரலாம். ஆனால், ஒவ்வொரு முறையும் நாங்கள் முடியாது என்கிறோம். அவர் (ராகுல்) மன்னிப்புக் கேட்க மாட்டார்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.