பா.ஜ.,வுக்கு அமெரிக்க பத்திரிகை பாராட்டு உலகின் முக்கியமான அரசியல் கட்சி| American press praises BJP as the most important political party in the world

வாஷிங்டன், ‘உலகின் மிக முக்கியமான வெளிநாட்டு அரசியல் கட்சியாக பா.ஜ., விளங்குகிறது. அதே நேரத்தில், அதன் கொள்கைகள் குறித்து சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை’ என, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து வெளியாகும், ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகையில், வால்டர் ருசல் மியட் என்பவர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில், சீனாவின் சவால்களை எதிர்கொள்ள, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்காவின் நம்பிக்கையை பெற்றவையாக உள்ளன.

தவறான புரிதல்

அமெரிக்கர்களின் நலனுக்காக, இந்தியாவுடன் நெருக்கமாக இருப்பது அவசியமாகும்.

இந்தியாவில், 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தலில் மிகப் பெரும் வெற்றியை பெற்றுள்ள பா.ஜ., அடுத்தாண்டு நடக்க உள்ள தேர்தலிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரும் பொருளாதார நாடாக வளர்ந்து வரும் இந்தியாவுக்கு புதிய முகத்தை, பா.ஜ., அளித்துள்ளது.

தற்போதைய நிலையில், உலகின் மிக முக்கியத்துவம் வாய்ந்த வெளிநாட்டு அரசியல் கட்சியாக பா.ஜ., உள்ளது.

ஆனால், அந்தக் கட்சி குறித்தும், அதன் கொள்கைகள் குறித்தும், வெளிநாடுகளில் உள்ளவர்கள், குறிப்பாக இந்தியர் அல்லாதோர் சரியாக புரிந்து கொள்ளவில்லை.

இந்தியாவின் கலாசாரத்துடன் இணைந்ததாக உள்ளதால், அந்தக் கட்சி குறித்த தவறான புரிதல்களும் உள்ளன.

பா.ஜ., தேசியவாதத்தை அடிப்படையாக வைத்து, ஹிந்துத்துவா மற்றும் நவீனமயம் இரண்டையும் கலந்ததாக உள்ளது. இதையே, அக்கட்சியின் தேர்தல் வெற்றிகள் வெளிப்படுத்துகின்றன.

முக்கியத்துவம்

‘முஸ்லிம் சகோதரத்துவம்’ அமைப்பு போல, மேற்கத்திய தாராளமயத்துக்கு அதிக முக்கியத்துவம் தருவதை பா.ஜ., எதிர்த்தாலும், நவீனத்தின் முக்கிய அம்சங்களை அக்கட்சி பயன்படுத்துகிறது.

சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியைப் போல, உலகின் வலுவான நாடாக இந்தியாவை மாற்றுவதற்கான முயற்சியில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது.

இஸ்ரேலின் லிக்விட் கட்சியைப் போல, சந்தைக்கேற்ற பொருளாதார நிலைப்பாடு, பாரம்பரிய மதிப்புகளுக்கு முக்கியத்துவம் தருவதை பா.ஜ., கடைப்பிடித்து வருகிறது.

ஹிந்துத்துவா வளர்ந்து வருவதால், அதன் பெருமைகளை பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., வலியுறுத்தி வருவதால், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்பது போன்ற ஒரு மாயையை உருவாக்கிஉள்ளனர்.

கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் வட கிழக்கு மாநிலங்களில் பா.ஜ., வென்றது, ஷியா முஸ்லிம்கள் அதிகம் உள்ள உத்தர பிரதேசத்தில் பா.ஜ., வென்றதை பார்க்கும்போது, பா.ஜ., சிறுபான்மையினருக்கு எதிரானதல்ல என்பது தெரியவரும்.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும், பா.ஜ.,வும், ஹிந்து தேசியவாதத்தை அடிப்படையாக வைத்து உள்ளன. இந்த அமைப்புகளின் தலைவர்களை சந்தித்தபோது, இந்தியாவில் முதலீடுகள் செய்வது குறித்தும், நாட்டின் வளர்ச்சி குறித்தும் மட்டுமே பேசினர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.