மாரடைப்பால் மற்றொரு மரணம்.. மிமிக்ரி கலைஞர் கோவை குணா காலமானார்!

பிரபல நகைச்சுவை கலைஞரான கோவை குணா (54), உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்.
தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது திறமையை நிரூபித்தவர், கோவை குணா. அந்த நிகழ்ச்சிகள் மூலம் உலக அளவில் பிரபலமடைந்ததுடன், தன்னுடைய தனித்துவ உடல்மொழியாலும் ரசிகர்களை ஈர்த்தார். குறிப்பாக நகைச்சுவை நடிகர் கவுண்டமணிபோல் மிமிக்ரி செய்வதுடன், அவர்போலவே அச்சுஅசலாக நடித்துக் காட்டக்கூடியவர். இதனால், அந்த நிகழ்ச்சிக்கு வரும் சிறப்பு விருந்தினர்களும், நடுவர்களும் கவுண்டமணிபோல் செய்யும் மிமிக்ரியை மீண்டும் மீண்டும் செய்யச் சொல்லி கேட்பார்கள். அவரும், அதேபோன்று செய்து ரசிகர்களை மகிழ்விப்பார்.
image
இதுதவிர, நடிகர்கள் சிவாஜி, ராதாரவி ஆகியோரின் குரல்களிலும் மிமிக்ரி செய்து ரசிகர்களை மகிழ்விப்பார். இதன்மூலம் அந்த நிகழ்ச்சிகளில் டைட்டில் வின்னராகக்கூட வெற்றி பெற்றிருக்கிறார். இப்படி வெற்றிபெற்ற அவர், கோயில் கலைநிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் கலந்துகொண்டு ரசிகர்களை சிரிக்கவைத்து வந்தார். ’சென்னை காதல்’ என்ற படத்திலும் கோவை குணா நடித்துள்ளார்.
பின்னர் தமிழ்நாடு பல குரல் கலைஞர்கள் என்ற சங்கத்தில் இணைந்து பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அவரது திறமைகளை வெளிப்படுத்தி வந்தார்.
கடந்த ஓராண்டாக சிறுநீரக பிரச்சனையால் டாயாலிஸ் செய்து வந்த அவர் சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று மதியம் திடிரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தற்போது அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. நாளை அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை குணாவின் இறப்பிற்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் நகைச்சுவை நடிகர்கள் பல குரல் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 80 மற்றும் 90 கிட்ஸ்களுக்கு மத்தியில் கோவை குணா பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, நகைச்சுவை நடிகர் மயில்சாமி கடந்த மாதம் மாரடைப்பால் உயிரிழந்தது தமிழ் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. அந்த அதிர்ச்சி மறைவதற்குள் மற்றொரு நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.