2024 தேர்தல்: "பாஜகவை தோற்கடிக்க வேண்டுமென்றால்…" எதிர்க்கட்சிகளுக்கு பிரசாந்த் கிஷோர் யோசனை!

எதிர்வரும் 2024-ம் ஆண்டுக்கான தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், காங்கிரஸ், பா.ஜ.க, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. இந்த நிலையில், தேர்தல் வியூகவாதியாக கருதப்படும் பிரஷாத் கிஷோர், சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,”எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வுக்கு சவால் விட வேண்டுமானால், அதன் பலத்தை அறிந்துகொள்ள வேண்டும். இந்துத்துவா, தேசியவாதம், வளர்ச்சி திட்டங்கள் ஆகிய 3 கொள்கை அடிப்படையில் பா.ஜ.க செயல்படுகிறது.

பிரசாந்த் கிஷோர்

இதில் இரண்டையாவது எதிர்கட்சிகள் முறியடிக்காவிட்டால், பா.ஜ.க-வை வெல்ல முடியாது. இந்துத்துவத்தை எதிர்த்து போராடுவதற்கு கொள்கைவாதிகளின் கூட்டணி வேண்டும். காந்திவாதிகள், அம்பேத்கர் கொள்கை கொண்டவர்கள், கம்யூனிஸ்டுகள் ஒன்று சேர வேண்டும். சித்தாந்தம் மிகவும் முக்கியமானது. ஆனால் சித்தாந்தத்தின் அடிப்படையில் மட்டும் குருட்டு நம்பிக்கையில் இருந்துவிடக் கூடாது. எதிர்க்கட்சி தலைவர்கள் யார் யாருடன் மதிய உணவு சாப்பிடுகிறார்கள், யாரை பார்ட்டிக்கு அழைக்கிறார்கள் என்பதையெல்லாம் சித்தாந்த அடிப்படையில்தான் நான் பார்க்கிறேன்.

கருத்தியல் ரீதியில் ஒன்றுபடாவிட்டால் பா.ஜ.க-வை தோற்கடிக்க எந்த வழியும் இல்லை. என்னுடைய சித்தாந்தம், மகாத்மா காந்தியின் சித்தாந்தம். அதனால் தான் பீகார் முழுவதும் “ஜன் சூராஜ் யாத்ரா” என்ற பெயரில் காந்தியின் காங்கிரஸ் சித்தாந்தத்தை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். இந்த யாத்திரையை பீகாரின் தலைவிதியை மாற்ற வேண்டும் என்பதற்காக மேற்கொண்டிருக்கிறேன். பீகார் சாதிய அரசியல் மற்றும் பல தவறான காரணங்களுக்காக அடையாளப்படுத்தப்படுகிறது. நான் காங்கிரஸுக்கு ஆலோசனை வழங்கியதற்கு காரணம் காங்கிரஸ் மறுபிறவி எடுக்க வேண்டும் என்பதற்காக தான்.

ராகுல் காந்தி

ஆனால் அவர்களின் குறிக்கோள் தேர்தலில் வெற்றி பெறுவது. அவர்கள் விரும்பிய வழியில் நாங்கள் உடன்படவில்லை. அதனால் என் யோசனைகளை செயல்படுத்தவில்லை. ராகுல் காந்தியின் ஆறு மாத பாரத் ஜோடோ யாத்திரைக்கு பாராட்டுகளும் விமர்சனங்களும் குவிந்தன. நானும் யாத்திரையை மேற்கொண்டு வருகிறேன். ஆனால் நான்கு மாவட்டங்களை மட்டுமே என்னால் கடக்க முடிந்தது. என்னைப் பொறுத்தவரை யாத்திரை என்பது அந்தப் பகுதியைப் புரிந்துகொள்வதற்கான பணி” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.