என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நாடாளுமன்றத்தில் பதிலளிக்க உரிமை உண்டு: ராகுல்காந்தி

புதுடெல்லி: என் மீதான குற்றச்சாட்டுகளுக்குநாடாளுமன்றத்தில் பதில் அளிக்க எனக்கு உரிமை உண்டு என்று மக்களவை சபாநாயகருக்கு ராகுல்காந்தி கடிதம் எழுதி உள்ளார். லண்டன் சுற்றுப்பயணத்தில் இந்தியாவுக்கு எதிராக பேசியதாக கூறி ராகுல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பா.ஜ எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். லண்டனில் இருந்து திரும்பிய ராகுல் நாடாளுமன்றம் வந்தபிறகும் அவர் பதில் அளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதுதொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்த ராகுல் தனக்கு பேச அனுமதி அளிக்கும்படி கோரிக்கை வைத்தார். தற்போது சபாநாயகருக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் ராகுல் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஆளும் ஆட்சியின் உறுப்பினர்கள் எனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்துக்கு நான் விளக்கம் அளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தங்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தேன். இப்போது நான் மீண்டும் அத்தகைய கோரிக்கையை முன்வைக்கிறேன். நாடாளுமன்ற  மரபுகள், அரசியலமைப்பு ரீதியான நீதி விதிகள், மக்களவை நடத்தை விதிகளின் விதி 357 ஆகியவற்றின் கீழ் இந்த அனுமதியை நான் கோருகிறேன். இந்தவிதிப்படி நீங்கள் தயவுசெய்து அனுமதிப்பது மட்டுமே பொருத்தமானது. எனவே விரைவில் மக்களவையில் பதிலளிக்க எனக்கு உரிமை வழங்குவீர்கள் என்றும் நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.